எப்ப பாரு இட்லி, தோசையா?இந்த மொறுமொறுப்பான டிஃபன் ரெசிபியை செய்யுங்களேன்!
சென்னை: எப்ப பார்த்தாலும் இட்லி, தோசை, சப்பாத்தினு போரடிக்கிறதா? கவலையை விடுங்க! ஈஸியா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு சூப்பர் டிபன் செய்யலாமே! வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
வீட்டில் காலை, இரவு நேரங்களில் என்ன டிபன் செய்வது என்பதே இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையாக இருக்கும். அதிலும் அந்த டிபனுக்கு தொட்டுக்க என்ன வைப்பது என்பது யோசனையிலும் யோசனையாகவே இருக்கும்.

இதனால்தான் சில பேர் இரவு நேரத்தில் சாப்பாடு வைத்து விடுவார்கள். இல்லாவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லாமல் உப்புமா, பொங்கல் செய்து வைத்து விடுவார்கள்.
பொங்கலுக்காவது சாம்பார், சட்னி தேவைப்படும். ஆனால் உப்புமாவுக்கு அது கூட தேவையில்லை. சர்க்கரை இருந்தால் போதும்! அதிலும் எப்ப பார் இட்லி, தோசைதானா என ஒரு கேள்வி கேட்பார்கள் பாருங்கள். அப்ப நமக்கு சுர்ர்னு கோபம் ஏறும்.
இப்படி கஷ்டப்படும் இல்லத்தரசிகள் சூப்பரான ஒரு புது விதமான டிஷ்ஷை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பெயர் தவாலா அடை! அது மருவி தவளை அடை என வந்துவிட்டது. இதற்கு முன் கூட்டியே மாவு தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசி- 1 கப்
துவரம் பருப்பு - அரை கப்
மிளகு- 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கடுகு தாளிக்க
கறிவேப்பிலை
துருவிய தேங்காய்- 1/3 கப்
ஒரு கப் மாவு எடுத்தால் அதற்கு 3 பங்கு தண்ணீர் தேவை
செய்முறை
அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதை எடுத்து நிழலில் உலர விடவும். 40 நிமிடங்கள் ஆனதும் அதனுடன் துவரம் பருப்பு, மிளகு சேர்த்து கொரகொரப்பான மாவாக அரைக்கவும்.
ரவையை காட்டிலும் பெரியதாக இருத்தல் வேண்டும்.
இந்த கலவையை அளந்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். அது வதங்கியதும் 1 கப் மாவிற்கு 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறிவிடவும்.
பின்னர் லேசாக ஆறியதும் அந்த மாவை நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தோசை கல்லில் சற்று தடிமானாக தட்டி இரு புறமும் தாராளமாக எண்ணெய் விட்டு சிவந்து வரும் வரை காத்திருக்கவும்.
அப்போது இரு புறமும் நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.
நடுவே உப்புமா போல் இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. தேவைப்பட்டால் தேங்காய் சட்னி அல்லது கார சட்னி செய்து சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications