கடலை மாவு இருந்தால் 5 நிமிடத்தில் பாம்பே சட்னி! பூரி மற்றும் சப்பாத்திக்கு டக்குனு செய்யலாம்!
Bombay Chutney Recipe In Tamil: டிபன் செய்யுறது ஒரு வேளை என்றால் அதற்கு தொட்டுக் கொள்ள தேடுவது அதைவிட பெரிய வேலையாக இருக்கிறது. தினமும் ஒரே மாதிரியான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது சாம்பார் என செய்து போர் அடித்துவிட்டதா? இதோ உங்களுக்காகவே வெறும் 5 நிமிடத்தில் தயாராகும் சுவையான பாம்பே சட்னி ரெசிபி!
இந்த பாம்பே சட்னியின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு தேங்காய் துருவ வேண்டிய அவசியமோ அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டிய வேலையோ துளியும் இல்லை. வெறும் கடலை மாவு மற்றும் வெங்காயம் மட்டுமே இருந்தால் போதும், ஹோட்டல்களில் பரிமாறப்படும் அதே சுவையில் இந்த கிரேவியை உங்கள் வீட்டிலேயே தயார் செய்துவிடலாம்.
இது புரதச்சத்து நிறைந்த கடலை மாவினால் செய்யப்படுவதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, நீண்ட நேரம் பசியைத் தாங்கும் சக்தியையும் வழங்குகிறது.

பூரி மற்றும் சப்பாத்திக்கு இது ஒரு மிகச்சிறந்த காம்பினேஷன் என்றாலும், இட்லி மற்றும் தோசைக்கும் இது ஒரு அருமையான துணையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். காரம் இல்லாததால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 1 (விருப்பப்பட்டால்)
- பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப)
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு (துருவியது)
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- கடுகு மற்றும் சீரகம் - தலா 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 2 முதல் 3 கப்
செய்முறை விளக்கம்
- முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 3 மேசைக்கரண்டி கடலை மாவை எடுத்துக்கொண்டு, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கட்டிகள் ஏதும் இல்லாமல் ஒரு கரண்டியால் நன்றாகக் கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து படபடவென பொரிய விடவும்.
- அடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சியைச் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். தக்காளி வதங்கியதும் இந்த கிரேவிக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருமுறை கிளறவும்.
- இறுதியாக நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள கடலை மாவு கரைசலை வாணலியில் ஊற்றி, கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கடலை மாவு வேகத் தொடங்கும் போது கிரேவி கெட்டியாகும், அப்போது தீயைக் குறைத்து வைக்கவும்.
- கடலை மாவின் பச்சை வாசனை முழுமையாக நீங்கி, சட்னி ஒரு பளபளப்பான பதத்திற்கு வந்தவுடன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அணைக்கவும்.












Click it and Unblock the Notifications