இன்று மகாளய அமாவாசை! முன்னோர்களுக்கு திதி கொடுக்க நல்ல நேரம் எது?
சென்னை: மஹாளய அமாவாசை இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தர்ப்பணம் செய்ய நல்ல நேரம் எது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபட்டால் அவர்களது பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் அமாவாசை தினங்கள் வந்தாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை ஆகியவை முக்கியமானவை. மகாளய பட்சத்தின் 16 நாட்களில் முன்னோர்களை திருப்திப்படுத்துவது நமது வழக்கமாக உள்ளது.

இந்த நேரத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், பிண்டம், முன்னோர்களை போற்றுதல், தர்மம் உள்ளிட்ட காரியங்களை செய்ய வேண்டும். அவர்களுக்கு படைக்கப்படும் பிரசாதங்களில் திருப்தியடைந்து உங்களை வாழ்த்துவார்கள்.
வழக்கமாக வரும் அமாவாசைகளில் திதி, தர்ப்பணம் கொடுக்காமல் விட்டுவிட்டாலும் ஆடி, தை , புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்த புண்ணியம் கிடைக்கும். அந்த வகையில் செப்டம்பர் 27 ஆம் தேதி பித்ரு பட்சம் தொடங்கியது. அது போல் மஹாளய அமாவாசை இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த அமாவாசை எப்படிப்பட்ட பித்ரு சாபத்தையும் போக்கும் வல்லமை கொண்டது. அமாவாசை நாளில் பசுமாட்டிற்கு அகத்தி கீரை கொடுத்து வழிபடுவது நல்லது. அமாவாசை திதி அக்டோபர் 9ஆம் தேதி இரவு 9.53 மணிக்கு தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி இரவு 9.34 மணிக்கு முடிவடைகிறது.
அக்டோபர் 10ஆம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கொடுக்கலாம். அதில் குறிப்பாக காலை 10.35 மணி முதல் 11.55 வரை தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு!
இலை போட்டு படைக்கும் நேரம் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஆகும். காலையில் தர்ப்பணம், மதியம் அன்னதானம் அல்லது முன்னோர் வழிபாடு, மாலை அகல் விளக்கேற்றி வழிபாடு என 3 எளிய விஷயங்களைச் செய்தாலே முன்னோர்களின் மனம் குளிரும்.


Click it and Unblock the Notifications
