திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 30: பாவை நோன்புக்காக 30 நாட்களும் பெண்களின் கஷ்டத்தை பாருங்கள்
சென்னை: மார்கழி மாதம் 30-ஆம் நாள் இன்று! பெண்கள் எத்தனை சிரமப்பட்டு இந்த பாவை நோன்பை நோற்கிறார்கள் என்பதை விளக்கும் வகையில் ஆண்டாள் இந்த பாடலை அருளியுள்ளார்.
மார்கழி மாதம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் தை பிறக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப அனைவரும் எல்லா வளங்களையும் பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்.

திருப்பாவை பாடல் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள், தனது முப்பது இனிய தமிழ்ப் பாடல்களில் ஒரு பாமாலையை இயற்றினார். அலைகள் சூழ்ந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி எனும் அரக்கனை வதம் செய்த கேசவனுமான கண்ணனை, சந்திரனை ஒத்த முகமும் அணிகலனும் அணிந்த பெண்கள் சிரமப்பட்டுத் தரிசித்து, பாவை விரதத்தின் பலனைப் பெற்ற விதத்தை இப்பாடல்கள் விவரிக்கின்றன.
இவற்றை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களையும் அழகிய திருமுகத்தையும் கொண்ட, செல்வங்களுக்கு அதிபதியான திருமாலின் ஆசியால், வாழ்வில் எங்கும் செல்வச்செழிப்புடன் இன்பமாக வாழ்வார்கள்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 10
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பாடல் விளக்கம்: மகாவிஷ்ணுவும், அவரது திருநாபிக்கமலத்தில் உதித்த பிரம்மாவும் தங்கள் காலம் வீணாவதாகக் கூறி வெகுவாக வருத்தத்தை வெளிப்படுத்தினர். திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் பேரருளைப் பூவுலகில் பிறந்த அடியார்கள் அனைவரும் பெறும் நிலையில், தாங்கள் பூமியில் பிறக்காத காரணத்தால் அத்தகைய அரிய பேற்றை இழந்ததாக அவர்கள் கருதினர்.
ஆகவே, உண்மையான கருணையுடன் இவ்வுலகிற்கு வந்து தங்களையும் ஆட்கொள்ள வேண்டும் என்று, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானிடம் மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் ஒரு மனதாக வேண்டுகோள் விடுத்தனர். யாருக்கும் உடனடியாக எளிதில் கிடைக்காத ஒப்பற்ற அமுதமாகப் போற்றப்படும் அப்பெருமான், பள்ளி எழுந்தருளி தங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் அவர்கள் மிகவும் பக்தியுடன் பிரார்த்தித்தனர்.
(முற்றும்)












Click it and Unblock the Notifications