திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 8: இருளை போக்கும் இறைவன்! பொறாமையை நீக்குகிறார்!
சென்னை: மார்கழி மாதம் 8-ஆம் நாள் இன்று! இறைவன் மனிதர்களில் உள்ள இருளைப் போக்குபவர். பனி படர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் வந்து எப்படி பிரகாசமாக்குகிறதோ அது போல் நம்முள் இருக்கும் ஆணவம், பொறாமை, அறியாமையை சிவபெருமான் ஒளி வெள்ளமாக்குகிறார் என்பதைத்தான் இன்றைய தினத்திற்கான பாடல் உணர்த்துகிறது.

திருப்பாவை பாடல் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்: அன்பு தோழியே! கிழக்கே வானம் வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நின்று கொண்டிருக்கின்றன. எல்லா தோழிகளும் நீராட வந்துவிட்டார்கள். நீ மட்டும்தான் இன்னும் வரவில்லை, அவர்கள் எல்லாம் என்னை நீராட ஆற்றில் இறங்குமாறு அவசரப்படுத்துகிறார்கள். ஆனால் எனக்குத்தான் மனம் ஒப்பவில்லை. நீ இல்லாமல் எப்படி நீராடுவது என கூறி அவர்களை தடுத்துள்ளேன். ஆனால் உன்னை கூவி கூவி அழைத்தாலும் நீ எழவில்லை. கேசி எனும் அரக்கன் குதிரை வடிவத்தில் வந்த போது அதன் வாயை பிளந்து கொன்றான் அந்த கண்ணன். அது போல் கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனை வணங்கினால் அவன் நமக்கு அருள் புரிவான் என கூறிவிட்டு சீக்கிரமாகவே தூங்க சென்ற நீ இன்னும் எழாமல் இருக்கிறாயே என அவரது தோழிகள் எழுப்புகிறார்கள்.
திருவெம்பாவை பாடல் 8
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்: அடியே கோழி கூவிவிட்டது. பறவைகள் இரைத் தேட புறப்பட்டு கீச்சிடுகின்றன. 7 ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைப்பது உனக்கு கேட்கவில்லையா? சிவனை எண்ணி நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா தோழி! நாங்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டும் எதுவும் பேசாமல் தூங்குகிறாயா? வாழ்க நீ! பாற்கடலில் பள்ளிக் கொண்டுள்ள திருமாலின் சிவபக்தி எத்தகையது என்பதை இந்த உலகமறியும்! அப்படியிருக்கும் போது நாங்கள் சிவனை பாடிக் கொண்டிருக்கிறோம், நீ எழாமல் இருக்கிறாயே என தோழிகள் அந்த தோழியை எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications