Aadi Amavasai 2025: இறந்தவர்கள் வீட்டுக்கு வர்றாங்க.. இதை மட்டும் பண்ணுங்க.. ஆடி அமாவாசை நல்ல நாள்
சென்னை: ஆடி அமாவாசை மிக முக்கிய நாளாக கருதப்படுவதற்கு என்ன காரணம் தெரியும்? அமாவாசை நல்ல நாளா?, கெட்ட நாளா? முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இந்த நாளில், சுப காரியங்களை செய்யக்கூடாது என்பது உண்மையா? நாளை அமாவாசை படையலிடும் நேரம், தர்ப்பணம் நேரம் என்ன? அமாவாசையின்போது செய்யக்கூடாத காரியங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பொதுவாக, அமாவாசைகளில் சுப காரியங்கள் செய்வதோ, ஒரு காரியத்தை ஆரம்பிப்பதோ கூடாது என்பார்கள்.. ஆனால், அமாவாசையும் நல்ல நாள்தான்..

அமாவாசை நல்ல நாள்
காரணம், சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் தினமே அமாவாசையாகும்.. இந்த நாளில் இறந்து போன நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வருவார்கள்.. தங்களது தலைமுறைகளை சூட்சுமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கனிவோடு பார்த்து, அந்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்வார்கள். எனவே மிக நல்ல நாளாகவே இந்த அமாவாசை பார்க்கப்படுகிறது.
அமாவாசைகளில் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை போற்றுதலுக்குரியதாக உள்ளது.. அந்தவகையில் நாளைய தினம் ஆடி அமாவாசை வருகிறது.. ஜூலை 24ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.06 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் 1.48 மணி வரை அமாவாசை நீடிக்கிறது.
தர்ப்பணம் செய்யும் நேரம்
எனவே சூரிய உதயத்திற்கு பிறகு காலை 7 மணி முதல் மதியம் 12 மணிக்கு உட்பட்டு தர்ப்பணம் தந்துவிட வேண்டும்.. அதேபோல, மதியம் 12 மணி முதல் 1.20 மணிக்குள் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையிலிட வேண்டும்..
பெற்றோரை இழந்தவர்கள், தலைக்கு குளித்து விட வேண்டும்... அதிலும், திதி தர்ப்பணம் தருபவர்கள், அதிகாலையிலேயே குளித்து முடித்து, தர்ப்பணம் காரியங்களை முடித்தபிறகுதான், காபி டீ குடிக்க வேண்டும்..
எறும்பு, பசு, காகம், நாய், பூனை, அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் உணவு வழங்கலாம்.. சாப்பாடு, கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகளை தானம் தந்தால் புண்ணியமாகும்.. வீட்டிலுள்ள முன்னோர்களின் படங்களுக்கும் துளசி மாலை, துளசி இலையை சமர்ப்பிக்க வேண்டும்.
எங்கே தர்ப்பணம் தரலாம்
திதி கொடுப்பவர்கள், நீர் நிலைகளுக்கு சென்று, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து, திதி, தர்ப்பணம் தரவேண்டும்.
நதிகள், கடல், புனித தீர்த்தங்கள், புண்ணிய தலங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவெண்காடு, திருவாரூர், பவானி கூடுதுறை போன்ற திருத்தலங்களில் தை அமாவாசை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் நீர் நிலைக்குச் சென்று பித்ரு கடனை செய்யலாம்
நீர்நிலைகளுக்கும் செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலேயே தர்ப்பணம் தந்துவிட்டு, அவைகளை அருகிலுள்ள நீர் நிலைகளில் கொண்டு சேர்த்துவிடலாம். அப்படியும் செய்ய முடியாதவர்கள், அல்லது உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள், மரத்தடியில் 3 முறை எள்ளும் நீரும் ஊற்றினால் போதும்.
எப்படி தர்ப்பணம் தர வேண்டும்
தாம்பாளத்தின் மேல் வலது கையில் கருப்பு எள் வைத்து இடது கை மூலம் வலது கையில் தண்ணீர் செலுத்தி காசியை நினைத்து முன்னோர்கள், மறைந்த பெரியவர்களுக்கு தர்ப்பணம் தரவேண்டும்.. பிறகு இந்த நீரை யாரும் கால் படாத இடத்தில் ஊற்றிவிடவேண்டும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால், அவர்களுக்கு ஏதாவது, குறைகள், கோபங்கள் இருந்தாலும், நீங்கிவிடும்.. தரப்படும் உணவாலும், பிரார்த்தனையாலும் அவர்களின் மனம் குளிரும்.. குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்கள்..
தர்ப்பணம் தந்ததுமே, வீட்டில் முன்னோர்களின் படங்களை வடக்கு கிழக்கு திசை பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சூட்டிவிட வேண்டும்.. முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களையும், அவர்களுக்கு பிடித்த பழம், இனிப்புகளையும் வைத்து, குத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
செய்ய வேண்டியவை என்னென்ன
பிறகு, ஊறவைத்த கோதுமை தவிடு, அகத்திக் கீரையையும், தண்ணீரையும் பசுமாட்டிற்கு கையாலேயே சாப்பிட தர வேண்டும்.. படையலிட்ட பிறகு அதனை காகத்திற்கு வைக்க வேண்டும்.. இதனால் சனி பகவானின் ஆசியும் கிடைக்கும். பசு, காகம், நாய், பூனை போன்ற ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்க வேண்டும்.
முன்னோர்கள், பித்ருக்கள் இந்த நாளில், நம்முடைய வீட்டிற்கு வருவதால், முறையாக வழிபட வேண்டும். அதனால்தான் அன்றைய நாளில், முன்னோர்களை தவிர இந்த நாளில் வேறு யாரையும் வணங்க கூடாது, எண்ணெய் தேய்க்கக்கூடாது என்பார்கள்.


Click it and Unblock the Notifications
