ஆடிப்பெருக்கு.. காவிரி தங்கைக்கு சீர்வரிசை கொடுத்த அண்ணன் நம்பெருமாள்.. கண் குளிர தரிசித்த பக்தர்கள்
திருச்சி: காவிரியை தங்கையாக பாவிக்கும் ஸ்ரீரங்கம் பெருமாள் ஆடிப்பெருக்கு நாளில் பட்டுப்புடவை, தாலி, மஞ்சள் குங்குமம்,மலர்மாலை உள்ளிட்ட மங்கலப் பொருட்களை சீர் வரிசையாக வழங்கினார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் சீர் வரிசை அளிக்கும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.
கர்நாடகத்தின் குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகி தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளங்கி வரும் காவிரி ஆறு பூம்புகார் அருகே கடலில் சங்கமமாகிறது. தமிழக மக்களால் தாயாக வணங்கப்பட்டு வருகிறாள் காவிரி. ஆடி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி நதி பாயும் பகுதிகள் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் காவிரித் தாயை பூ, பழங்கள், உணவுப்பொருட்கள் வைத்து வணங்கினர். தீபங்களை ஏற்றி ஆற்றில் விட்டனர்.

ஆடிப்பெருக்கு தினத்தில் சகோதரிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து, சீர் வழங்குகின்ற வழக்கம் இன்றைக்கும் பல ஊர்களில் இருந்து வருகிறது. அதே போல அண்ணன் நம்பெருமாள் தங்கை காவிரிக்கு சீர் வரிசை பொருட்களை ஆண்டுதோறும் கொடுத்து வருகிறார்.
ஸ்ரீரங்கம் என்பது ஒரு தீவு. காவிரியும் அதன் உப நதியான கொள்ளிடமும் ஸ்ரீரங்கத்தை மலர் மாலை போல் சூழ்ந்து வணங்குவதைப் போல உள்ளது. மகாவிஷ்ணுவுக்குத் தங்கை முறை காவிரி. பார்வதி தேவி தங்கை என்றால், அவள் வடிவான காவிரியும் தங்கைதானே! தன் அண்ணனை வணங்கும் விதமாக ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி.தங்கையான காவிரியே தன்னை மலர்மாலை போல் சூழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால் அண்ணனான ரங்கநாதருக்கும் காவிரியின் மேல் அதீத பாசம்.
காவிரி தங்கைக்கு ஆண்டுதோறும் ஆடி 18ஆம் நாள் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். ஆடி 18ஆம் நாளான இன்று நம்பெருமாள், காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 4 மணிவரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன்பின்னர் நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க காவிரி படித்துறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சீர்வரிசை பொருட்களை காவிரி தாய்க்கு வழங்கும் வகையில், காவிரி ஆற்றில் விடப்பட்டு, சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியை வணங்கி, 'ரங்கா... ரங்கா' என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.












Click it and Unblock the Notifications