ஆடிப் பெருக்கு! கரை புரளும் காவிரி படித்துறையில் புதுமணத் தம்பதிகள் காப்பரிசி படையலிட்டு வழிபாடு
திருச்சி: காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி கரைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவிரித் தாய்க்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர். இந்த ஆண்டு காவிரியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், மக்கள் உற்சாகத்துடன் விழாவைக் கொண்டாடினர்.
ஆடி மாதத்தின் முக்கியமான விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுமார் 16 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிக்கரையில் குவிந்தனர். தலைவாழை இலை போட்டு, காவிரித் தாய்க்கு காப்பரிசி, காதோலை, கருகமணி போன்ற மங்கலப் பொருட்களைப் படையலிட்டு, கற்பூர தீபம் காட்டி வழிபட்டனர்.
புதுமணத் தம்பதியினர் ஜோடியாகக் காவிரிக்கு வந்து, காவிரித் தாயை வணங்கி, புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டனர். இதேபோல், சுமங்கலிப் பெண்களும், திருமணமாகாத இளம் பெண்களும் புதிய மஞ்சள் கயிறு அணிந்து மகிழ்ந்தனர்.
இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், திருச்சி அம்மா மண்டபம், சிந்தாமணி ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் படிக்கட்டுகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்காதபடி தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், ஆற்றில் இறங்கிக் குளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆடிப்பெருக்கு விழாவிற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வீரர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை மற்றும் மாநகராட்சி சார்பில், மக்கள் பாதுகாப்பாக விழாவைக் கொண்டாடுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications