Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலம் திருவிழா.. சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

மதுரை : உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

ஆவணி மூலத்திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். ஆவணி மூலத்திருவிழா இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 13ஆம் தேதி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழா நேற்று தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை நடக்கிறது. முக்கிய விழாக்கள் 19ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. அதில் 19ஆம் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 20ஆம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 21ஆம் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 22ஆம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 23ஆம் தேதி உலவாக்கோட்டை அருளியது, 24ஆம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.

 Aavani moolam festival Madurai 2023: Sivaperuman Tiruvilaiyadal begins with flag hoisting

சிவபெருமான் திருவிளையாடல்: 25ஆம் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 26ஆம் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 27ஆம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 28ஆம் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 29ஆம் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 30ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தன் மீது பக்தி கொண்ட மாணிக்கவாசகருக்காகவே ஆவணி மாதத்தில் அற்புதமான திருவிளையாடல்களை நடத்தி காட்டியுள்ளார் சிவ பெருமான். ஆவணி மாதம் முதல் மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி முடிவடைந்து சிவபெருமானின் ஆட்சி ஆரம்பமாகிறது.

மூலம் நட்சத்திரம் சிறப்பு: ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும், எப்படிப் பார்த்தாலும் அது அழிவைத் தருவதாகவே இருக்கிறது. எனவேதான் சம்ஹாரமூர்த்தியான சிவனுக்கு அச்சமயம் விழா எடுத்து அவரைச் சரணடைந்து பிரார்த்திக்கும் நாளாக அக்கால கட்டத்தை அமைத்தார்கள். இதற்காகத்தான் மீனாட்சி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்களில் ஆவணி வீதிக்கு மட்டும் ஆவணி மூல வீதி என்று நட்சத்திரத்துடன் இணைத்துப் பெயர் சூட்டினர்.

அசுர சக்திகள்: ஆவணி மூலத்திருநாள் அசுர சக்திகளை வென்று ஒழிப்பதற்குத் துணை செய்கிறது. மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருருதி என்ற அசுரன் தேவ சக்தி, அசுர சக்தி என்ற இருவகை சக்திகளில் தெய்வ சக்திகள் ஆத்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு அனுகூலமானவை. அசுர சக்திகள், ஆன்ம முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவை. இந்த தேவ அசுரப் போராட்டத்தில் நாம் செய்வ சக்திகளிடம் தஞ்சமடைய வேண்டும். நிருருதி என்ற அசுரத் தலைவனின் செல்வாக்கு மூல நட்சத்திரத்தை ஆட்கொள்வதால் ஆவணி மூல விழாக் கொண்டாட்டத்தால் ஏற்படும் பக்தி உணர்ச்சியைக் கொண்டு அந்தச் செல்வாக்கை ஒழிக்க முயல வேண்டும் என்று கூறுவார்கள்.

மதுரைக்கு வந்த சிவபெருமான்: மாணிக்கவாசக சுவாமிகளுக்காக சுந்தரேஸ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் இதுவாகும். அதாவது, மாணிக்கவாசக சுவாமிகளைப் பாண்டிய மன்னன், அவர் தமது கடமையில் இருந்தும், மன்னனின் கட்டளையில் இருந்தும் மீறியதற்காக, சிறையில் இட்டும், நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்க வைத்தும் தண்டித்தார். சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும்.

வைகையில் பெருக்கெடுத்த வெள்ளம்: இக்காலத்தில் வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும் பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. பாண்டிய மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்தளிக்கப்பட்டன. செம்மனைச் செல்வி(வந்தி) என்ற, பிட்டு விற்கும் ஏழை, மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்தும் கடப்பாட்டுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். முதுமை காரணமாக, அவரால், தனது பகுதி வேலையை செய்ய முடியவில்லை. ஏழை மூதாட்டியார் மற்றவர் உதவியை நாடினார். கூலியாள் வடிவில் வந்த, சிவபெருமான் உதிர்த்த பிட்டை ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். ஊதியத்தை உண்டபின், தனது வேலையைச் செய்ய, மூதாட்டியிடம் விடைபெற்று அற்றங்கரைக்குச் சென்றார்.

பிரம்மபடி: தனது வேலையை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார் கூலியாள். இதை கவனித்த மேற்பார்வை அதிகாரிகள், கூலியாளை எழுப்பி அவர் வேலையைச் திருந்தச் செய்யப் பணித்தனர். அது பலனளிக்காது போகவே கூலியாளுக்கு தண்டனை வழங்கினர். கூலியாளின் முதுகில் சுளீர் என்று பிரம்பால் அடித்தார். சிவனுக்குக் முதுகில் கிடைத்த பிரம்படியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் ஐயோ என்று அலறினான். தனது பிழையையும் உணர்ந்தான் வந்தது சிவபெருமான் என்று பாண்டிய மன்னன் உணர்ந்தான் என்கிறது புராணம். எனவேதான் மதுரையில் இன்றைக்கும் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+