கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு.. 30 ஆண்டுகளுக்குப் பின் சேலத்தில் கோலாகலம்.. குவிந்த பக்தர்கள்
சேலம்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோயிலில் கடந்த 1993 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் 30 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

கும்பாபிஷேகத்தை விரைந்து நடந்த வேண்டும் என்று பக்தர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து பழுதான கோயில் மண்டபங்களை புதுப்பிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்றது. கடந்த 2016ம் ஆண்டு முதல் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்றன.
தொடர்ந்து கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோயில் வளாகத்தில் முகூர்த்த கால் நடைபெற்று கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. இதனையடுத்து
கடந்த 18ஆம் தேதி புதிய கொடி மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் புனித தீர்த்தக்குடம் மற்றும் முளைப் பாரி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேகத்துக்காக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாக சாலையில் 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டு, வேத, மந்திரங்கள் முழங்கிட யாக சாலை பூஜை தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, கணபதி வழிபாடு, புண்யாக வாசனம், பூதசுத்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாக சாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
இரவு 10 மணிக்கு முதல்கால பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், தமிழ் முறை ஓதுதல், மகா தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப் பட்டது. இதற்கிடையில் மூலவர் கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து அஷ்டப்பந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை 6 மணிக்கு 3 ஆம் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
மாரியம்மனுக்கு அண்ணனாக கருதப்படும் அழகிரிநாதர் கோயிலில் இருந்து 108 வகையான சீர்வரிசை பொருட்களும் கொண்டு வரப்பட்டன.
இன்று அதிகாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை நான்காம் கால வேள்வி வழிபாடும், காலை 7.40 மணி முதல் காலை 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சந்நிதி விமானம் மற்றும் கொடி மரத்துக்கு சமகாலத்தில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்துக்குள் மூலவர் பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரை வீரன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்.எல்.ஏ.,க்கள், எம்பி.,க்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. அதேபோல் கும்பாபிஷேகம் முடிந்ததும் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி அன்னதானம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் ஆகியவை செயல்படுகின்றது. இதனிடையே இன்று மாலை நடைபெறும் தங்கத் தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவையொட்டி, சேலம் பட்டைக்கோயிலில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரண்டாவது அக்ரஹாரம், டவுன் ரயில் நிலையம், திருவள்ளுவர் சிலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயிலை சுற்றிலும் மாநகர காவல் துறை மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications