அட்சய திருதியை..சனிபகவானின் ஊனம் நீக்கிய அட்சயபுரீஸ்வரர்..கோடீஸ்வர யோகத்துடன் மண யோகம் தேடி வரும்
தஞ்சாவூர்: அட்சய திருதியை தினமான இன்று அற்புதமான ஒரு பரிகார தலத்தை பார்க்கப்போகிறோம். உடல் ஊனம் நீங்கவும், திருமண யோகம் கைகூடி வரவும்,செல்வம் பெருகவும் அட்சயபுரீஸ்வரரை வணங்கலாம். சனிபகவானின் உடல் ஊனத்தை நீக்கிய சிவபெருமான் இத்தலத்தில் திருமணமாகும் அருளையும் வழங்கினார்.
சூரிய தேவனின் மகன் சனிபகவான். இன்னொரு மகன் எமதர்மன். இருவரும் பகை கொண்ட நேரம் நிறைய உண்டு. ஒரு சமயம் பகையினால் எமதர்மன் சனிபகவான் காலில் ஓங்கி அடிக்க, அதனால் சனிபகவானின் கால் ஊனமானது. கால் ஊனத்துடன் நிவாரணம் தேடி மனித உருவத்தில் சுரைக் குடுவையில் பிச்சை ஏந்தி பெற்ற அந்த தானியங்களைச் சமைத்து அன்னதானமாக ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் அளித்து வந்தார் சனிபகவான்.

ஊர் ஊராக சுற்றி வந்த சனிபகவான் விளாமரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பாதையை கடக்கும் போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே சித்திரை திங்கள், வளர்பிறை திருதியையும், நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த புனித நன்னாளில் பல கோடி யுகங்களாக மறைந்திருந்த 'பூச ஞான வாவி' என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனிபகவானை மேலே எழுப்பி கரை சேர்த்தது. இதனால் சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தியானது. விளாவேர் தடுக்கி சனி பகவான் விழுந்ததால் சுரந்த ஞான வாவி தீர்த்தம் குளமாக உருவானது. அதனால் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி விளங்குளம் என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். கால் ஊன் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார். அவரே இந்த ஆலயத்தின் மூலவர். மாந்தா தேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பெண்களை இங்கு மணந்த சனிபகவான் இங்கு ஆதி பிருஹத்சனீஸ்வரர் என்ற பெயருடன் திருமணக் கோலத்தில் தன் துணைவியருடன் தனி கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டது. எனவே சனி பகவான் அந்த காகத்தினையே தனது வாகனமாக இங்கு ஏற்றுக் கொண்டார்.
விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகள் செயலற்று போகவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இங்கு சனி பகவான் அருள் பாலிக்கிறார். சனி தோஷம் உள்ளவர்களும், சனி கிரக பாதிப்பு உள்ளவர்களும், சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்துவிட்டு பிரகாரத்தில் காக்கையை அழைத்து உணவு படைக்கின்றனர்.
காக்கைகள் அந்த உணவை எடுத்து சாப்பிட்டால் அவர்களது சனி தோஷம் அறவே விலகிவிட்டது என்று பொருளாம். ஒரு வேளை அந்த உணவை உண்ண தயங்கி பறந்து போனால் அவர்களது தோஷம் விலகவில்லை என்று அர்த்தமாம். எனவே அவர்கள் மறுபடியும் சனி பகவானை தேடி வந்து பிரார்த்தனை செய்து உரிய பயனைப் பெறுவது வழக்கமாக உள்ளது.
ஆலயத்தின் தல விருட்சம் விளாமரம். ஆலயத்தின் வட திசையில் விருட்சம் உள்ளது. அட்சய திரிதியை நாளில் அட்சயபுரீஸ்வரரால் ஊனம் நிவர்த்தி பெற்ற சனி பகவான் கிழக்கு பிரகாரத்தின் வடதிசையில் தனி ஆலயத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆலயத்தின் எதிரே அழகிய சிறிய ஆலயத்தில் விஜய விநாயகர் மேற்கு திசை நோக்கி அமர்ந்து தன் தந்தையை நோக்கியபடி அருள் பாலிப்பதை தனி சிறப்பாக கூறுகின்றனர் பக்தர்கள்.
சித்திரை திங்கள் வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்கு அருள் பாலிக்கும் இறைவி அபிவிருத்தி நாயகி தன் பக்தர்கள் அனைத்து நிலைகளிலும் அபிவிருத்தி அடைய அருள் புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை. அட்சய திருதியை நாளில் இறைவனுக்கு சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபடுதலும், சனி பகவானுக்கு புணுகு கலந்த சந்தனக் காப்பிட்டு வழிபடுதலும் மிகுந்த பலனைத் தரும்.
இந்த ஆலயத்தில் அட்சய திருதியை அன்று சனி பகவான் பலவித சூட்சும வடிவங்களில் சிவபெருமானை நாள் முழுவதும் வழிபடுவதாக ஐதீகம். சனி பகவான் உடன் இருந்து வழிபடும் நாளான அட்சய திரிதியை நாளில் நாமும் அட்சய புரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க செல்வம் பெருகும். வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்பது நிச்சயம். சனி பகவானின் ஊனத்தை தீர்த்த இறைவன் அட்சய புரீஸ்வரர் தன்னை வணங்குவோரின் உடன் ஊனத்தையும், மன ஊனத்தையும் நீக்குவதுடன் ஏழ்மை என்னும் ஊனத்தை நீக்கி அவர்கள் வளம் பெற்று வாழ அருள்புரிவார்.
அட்சய திருதியை திருவிழா ஊனம் நீக்குதல், திருமணதடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இத்திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டு தோறும் அட்சய திருதியை அன்று அட்சய திருதியை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை திருவிழா இன்று நடக்கிறது.
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலும், கிழக்கு கடற்கரை சாலையில் விளங்குளம் சோதனை சாவடியில் இருந்து 2 கி.மீ தூரத்திலும், பேராவூரணியில் இருந்து ரெட்டவயல், பெருமகளூர் வழியாக 20 கி.மீ தூரத்திலும் கோவில் அமைந்துள்ளது.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications