மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சி! நாளை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சம்பவம் நாளை நடைபெறுகிறது. இதற்காக ஏராளமானோர் மதுரை செல்கிறார்கள். இன்றைய தினம் அழகர் எதிர்சேவை நடைபெறுகிறது. இதற்காக அழகர்கோவிலில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு மதுரை வந்தார் கள்ளழகர்.
உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரையின் மாசி வீதிகளில் சித்திரை திருவிழா களைகட்டியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த வியாழக்கிழமையும் திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமையும் நடந்து முடிந்தது.

இன்று நடைபெறும் எதிர்சேவைக்காக அழகர் நேற்று மாலை அழகர்கோவிலிலிருந்து அழைத்து வரப்பட்டார். மதுரை வந்த அவரை சர்க்கரை கிண்ணத்துடன் பக்தர்கள் வரவேற்றனர். தன் பரிவாரங்கள் புடைசூழ கள்ளழகர் வருகை தந்தார்.
இன்றைய தினம் மாவடியில் கள்ளழகரை அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தங்க குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.
இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பர். மே 13 ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் மே 15 ஆம் தேதி மதுரையிலிருந்து அழகர்மலை நோக்கி கள்ளழகர் புறப்பாடும் நடைபெறும்.
பின்னர் மே 17ஆம் தேதியுடன் மதுரை சித்திரை நிறைவு பெறுகிறது. அழகர் ஆற்றில் இறங்குவதற்காக வைகை ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டது. ஆற்றில் இறங்கும் அழகர் என்ன நிறத்தில் ஆடை உடுத்தி வருகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த ஆடையின் நிறத்தை வைத்து இந்த ஆண்டு நல்லது கெட்டதுக்கான பலன்களை மக்கள் கணித்துக் கொள்கிறார்கள். சிவப்பை தவிர மற்ற நிறங்களை அணிந்தால் சுபிக்ஷம். கடந்த சில ஆண்டுகளாக பச்சை பட்டுடுத்தியே அருள்பாலிக்கிறார்.
அழகர் உடுத்தும் ஆடைகளும் அணியும் தங்க நகைகளும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்த பெட்டியில் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட நிறங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். அழகர் எந்த நிறத்தில் புடவை கட்டி ஆற்றில் இறங்குவாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாக தலைமை பட்டர், அழகரை வேண்டிக் கொண்டு அந்த பெட்டிக்குள் கையை விட்டு துழாவுவார். அப்போது எந்த நிறம் கிடைக்கிறதோ அந்த நிறத்தை கள்ளழகருக்கு உடுத்துவார்களாம். பச்சை கட்டி வந்தால் நாடு செல்வச் செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக அழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்.
வெள்ளை மற்றும் நீலப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். அழகர் சிவப்புப் பட்டு கட்டிவந்தால் பேரழிவு ஏற்படும் என்கின்றனர். அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காதாம்.












Click it and Unblock the Notifications