ஆச்சரியம் தரும் ஆயிரம் கால் மண்டபம்.. கடலூர் நடராஜர் கோயிலின் சிறப்புகளும், அந்த சிதம்பர ரகசியமும்
கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம். இந்த கோயிலுக்கு சென்று நாம் தரிசிக்கும்போது முக்தி கிடைப்பதாக நம்பப்படுகிறது.. இந்த கோயிலின் சிறப்புகளும், பிரம்மாண்டமான கலைநயங்களும் உலகப்புகழ் பெற்றவையாகும்.. குறிப்பாக ஆயிரம் மண்டபத்தில் நடந்த அதிசயம் என்னென்ன? அவைகளை பற்றிதான் இங்கு விரிவாக பார்க்க போகிறோம்.
சித்+அம்பரம்= சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி என்பதன் இதன் பொருளாகும். திருமூலட்டநாதர் ஆலயம் என்பது இதன் பெயர்.. ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயில் என்றால்தான் அனைவருக்கும் புரியும்.. இங்கு அருள்பாலிக்கும் ஆடல் அரசனான நடராஜர் வீற்றிருக்கும் இடமே, பொற்சபை எனப்படும். இதனை பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

சிவ தாண்டவம் - பொன்னம்பலம்
வைணவத்தில் கோயில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோயில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது.
சிவபெருமான் 108 தாண்டவம் ஆடியதாக புராணங்கள் சொன்னாலும், அவற்றில் முதன்மையாக உள்ளது வெறும் ஐந்து ஆகும். எனவேதான் இதற்கு பஞ்ச தாண்டவம் என்கிறார்கள். இந்த பஞ்ச தாண்டவங்கள் ஆடிய திருத்தலங்களை பஞ்ச சபைகள் அல்லது பஞ்ச அம்பலங்கள் என்பார்கள. திருவாலங்காடு, மதுரை, நெல்லை, திருக்குற்றாலம் , சிதம்பரம் போன்றவைதான் அந்த பஞ்ச அம்பலங்கள்.. இதில், சிதம்பரம் சிற்சபையில் (பொன்னம்பலம்) ஆனந்த தாண்டவத்தை ஆடி அருள்பாலிக்கிறார்.
அதேபோல, ஒரே இடத்தில் நின்று சிவன், விஷ்ணு இருவரையும் வழிபடும் வகையில் 2 சன்னிதிகளும் அருகிலேயே அமைந்திருக்கும் ஒரே காயில் இந்த சிதம்பரம் கோயில்தான். அதாவது, சைவத்தின் கடவுளான தில்லை நடராஜர் பொன்னம்பலத்திலும், வைணவத்தின் கடவுளான தில்லை கோவிந்தராஜர் தெற்றிய்மபலத்திலும் இங்கு ஒன்றாக வீற்றிருக்கிறார்கள்.
3 தீர்த்தம் - 27 லிங்கம்
மூர்த்தி, தலம், தீர்த்தம் 3 உள்ளது என்றாலும், இதில் புகழ்பெற்றது சிதம்பரம் கோவில்தான்.. ஏனென்றால், இந்த கோயிலில் 10 தீர்த்தங்கள் உள்ளன. குறிப்பாக சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சிவப்பிரியை தீர்த்தம், புலிமடு தீர்த்தம், குய்யதீர்த்தம், திருப்பாற்கடல் போன்றவைகள் ஆகும்.
ஆனித்திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய 2 திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும். நடராஜர் கோயிலுக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் கோயிலில் உள்ளன.
தெய்வ உருவங்கள்
சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். ஆனால், இந்த சிதம்பரத்தில் அப்படியான அமைப்பு இல்லை.. அதுமட்டுமல்ல, சிதம்பரம் ரகசியம் என்று சொல்லப்படும் பகுதியில் தங்கத்திலான வில்வத்தளம் தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி கிடைக்கும் என்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.ஒவ்வொரு கலைநயம் மிக்க மண்டபங்களும் சன்னிதிகளும். நடராஜர் கோயிலில் நடராஜர் வீற்றிருப்பதே கனகசபை. இந்த கோயிலில் போற்றத்தக்க அம்சம் ஆயிரங்கால் மண்டபம்.. இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். ,. எனவேதான் இங்கு இறைவன் ஆடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்று அழைக்கிறார்கள்.
இந்த 1000 என்பது 999 கால்கள் மட்டுமே உள்ளன.. நடராஜர் வருடத்துக்கு 2 முறை அங்கே வந்து தரிசனம் கொடுப்பதால் அந்த ஒரு காலில் நின்று அருள் அளிப்பதால் அதனைசேர்த்து ஆயிரங்கால் மண்டபம் என்கிறார்கள். 1000 தூண்களால் ஆன இந்த மண்டபம், இந்திய புராணங்களின் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சித்தரிப்புகளுடன் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது.
நடராஜர் அபிஷேகம்
நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் மட்டும் நடைபெறும். அதில் ஆனி மாதம் நடைபெறும் அபிஷேகம் மிகப்பெரும் விழாக்கோலம் காணும்.
இநத சைவ திருத்தம், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக சொல்கிறார்கள். ஆனித் திருமஞ்னம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன உற்சவத்தின்போது நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளி மகா அபிஷேகம், லட்சார்ச்சனை போன்றவை இங்கு நடைபெறும்போது திருவாபரண அலங்காரத்தில் சுவாமி, அம்பாளும் அருள்பாலிப்பார்கள்.
இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் அனைத்தும், இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் தான் நடைபெறும். எனவேதான் இதற்கு ராஜசபை என்றும் சொல்வார்கள். இந்த மண்டபத்தில்தான் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர், "பதஞ்சலி பத்ததி" என்ற நூலை இயற்றினாராம்.. இந்த நூலில் எழுதியிருப்பதுபோலவேதான், கோயிலில் நித்ய, நைமித்திக பூஜைகள் இன்றுவரை நடைபெற்று வருகின்றன.
சங்கீத அரங்கேற்றம்
அதுமட்டுமல்ல, பதஞ்சலி முனிவர், பதஞ்சலி வியாகரண சூத்திரத்ததை இதே ஆயிரம் கால் மண்டபத்திலிருந்து எழுதியதாக சொல்வார்கள்.. சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்திற்கு இறைவனே உலகெலாம் என்ற அடி பிறந்ததும், அந்த நூல் அரங்கேறியதும் இதே ஆயிரங்கால் மண்டபத்தில்தான் என்கிறார்கள். மாணிக்கவாசகர் வாய்மொழியாக சொல்லி சிற்றம்பலமுடையான் எழுதியதாகவும், அந்த ஓலையில் கையொப்பம் இட்டதாகவும் கூறப்படுகிறது. மாணிக்கவாசகர் வாய் பேச முடியாத பெண்ணை பதிகம் பாடி பேச வைத்ததும் இதே மண்டபத்தில்தான்..
திருவாசகத்தை பாடியபோது இறைவனே பிரதி எடுத்ததாகவும், பிறகு அதனை பின்னர், திருக்கோவையாக பாட வைத்து, அதையும் தாமே பிரதி செய்து அருளியதானவும் புராணங்கள் கூறுகின்றன. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், ஆனந்தத் தாண்டவம் ஆடியபோது, ஈசனின் திரு முடியிலிருந்த சந்திரனின் அமிர்தத்தாரைகள் இறைவன் அணிந்திருந்த மண்டையோட்டு மாலையில் விழுந்தன. இதனால், அந்த மண்டையோடுகள் உயிர்பெற்று பாடத் துவங்கி, அதிலிருந்தே சங்கீதம் உருவாகியிருக்கிறது. எனவேதான், நடனம் கற்கும் மாணவர்களின் சங்கீத அரங்கேற்றம் இங்கு நடத்தப்படுகிறது.
சிதம்பர ரகசியம் தத்துவம்
சிதம்பரம் ரகசியம் என்பது என்ன தெரியுமா? 18ம் நூற்றாண்டின் விடிவெள்ளியாக தோன்றிய வள்ளலார், சிறு குழந்தையாக இருக்கும்போது, பெற்றோர்கள் அவரை சிதம்பரத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அங்கே நடராஜப் பெருமானுக்கு வழிபாடு நடக்கும்போது, திரை விலக்கி எதுவும் இல்லை என்ற ஆகாய தத்துவத்தை விளக்கும்போது, அந்த குழந்தை முகமலர்ந்து சிரித்ததாம்.
அதாவது, ஆனந்தத் தாண்டவனின் ஆலயத்தில், தான் கண்டுகொண்ட ஆச்சர்யத்தைக் கண்டு, அப்படி சிரித்ததாம். அதுதான் சிதம்பர ரகசியம்.. அதாவது, இறைவன் ஆகாயமயமாக இருக்கிறான் என்பதே அந்த ரகசியம். வானத்திற்கு வடிவமோ, நிறமோ, உணர்வோ எதுவுமே கிடையாது. அதுபோல, இறைவன் இல்லாமலும் இருக்கிறார் என்பதே ஆகாய தத்துவம்.. வானத்தில் எதுவுமில்லாத தன்மை நிலவும்.. இதுவே சிதம்பர ரகசியம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications