தீபாவளி கொண்டாடும் ஏழுமலையான்.. திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானம்.. குவியும் பக்தர்கள்
திருப்பதி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்றைய தினம் தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதனை திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஐபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெங்கடாசலபதி சந்நிதிக்கு முன்பு உள்ள தங்கவாசலுக்கு அருகே கண்டா மண்டபத்தில் ஆஸ்தான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருமலையில் தீபாவளியன்று பெருமாளுக்கு, தீபாவளி ஆஸ்தானம் காலங்காலமாக நடைபெறுகிறது. இது மிகச் சிறப்பானது. தீபாவளிக்கு முதல் நாள் இரவு, மலையப்ப சுவாமி ஊர்வலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்பு அங்குள்ள பக்தர்களுக்கு தைலம் விநியோகம் செய்யப்பட்டது. தீபாவளி நாளில் அதிகாலையில் தலைக்குத் தேய்த்து, தலைக் குளியல் செய்துகொண்டு, திருவேங்கடமுடையானின் அருளைப் பெறவேண்டும் என்பது ஐதீகம்.
தீபாவளியன்று சுப்ரபாதம் தொடங்கி, முறையே முதல் மணி நிவேதனம் நடைபெற்றது. பின்பு தங்க வாயில் முன் ஏற்பாடு செய்த சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருள்வர். இவற்றோடு ஜீயர் சுவாமி, பட்டு வஸ்திரங்களை வெள்ளித் தட்டில் கொண்டு வர, உடன் தேவஸ்தான அதிகாரிகளும் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு கொடிமரத்தைச் சுற்றி வந்து ஆனந்த நிலைய விமானத்தை சுற்றி சமர்ப்பிப்பார்கள்.
தீபாவளி நாளன்று பெருமாளுக்கு விசேஷமான தளிகை உண்டு. கிபி 1542-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டு உள்ள திருமலை திருப்பதி பெருமாள் கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளில், திருப்பதி பெருமாளுக்கு தீபாவளியன்று அதிரசப்படி இரண்டு என உள்ளது. இதன்மூலம், தீபாவளி பண்டிகையன்று, திருப்பதி பெருமாளுக்கு அதிரசம் படைக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவேதான் இன்றைக்கும் தீபாவளி பண்டிகை நாட்களில் அதிரசம் செய்வது வழக்கமாக உள்ளது.
தீபாவளி நாளில் ஏழுமலையானுக்கும் மலையப்பசுவாமிக்கும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும். தீபாவளி ஆஸ்தானம் உற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதே சமயம் சகஸ்ரநாம தீபஅலங்கார உற்சவ சேவை மாலை 5 மணிக்கு வழக்கம் போல் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளி சிறப்பு உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமலை ஏழுமலையான் கோவிலில் குவிந்துள்ளனர்.
இதனிடையே கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள வெங்கடாஜலபதி கோவிலில் இன்று தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு புதிய பட்டாடை பல வண்ண மலர்களால் அலங்கரித்து பூலங்கி சேவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் தோமாலை சேவையும் இரவு ஏகாந்த சேவையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications