கயை, காசிக்கு போகாமலேயே! புண்ணியம் பெற செங்கல்பட்டுக்கு போங்க! பெருமாளே திதி கொடுத்த கதை தெரியுமா?
சென்னை: செங்கல்பட்டு அருகே நென்மேலியில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் கயையில் செய்த புண்ணியம் உங்களை வந்தடையும். இதன் பெயரே எளியவர்களின் கயா ஆகும். காசிக்கு நிகராக இந்த கோயில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: எளியவர்களின் கயா நென்மேலி திருத்தலம். செங்கல்பட்டு அருகில் நென்மேலி என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இது எளியவர்களின் கயா என்று அழைக்கப்படுகிறது.

செங்கல்பட்டு அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப்படுகிறது. மேலும் இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி "சிரார்த்த சம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு பிண்டம் வைத்த நல்லூர் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் வழங்கப்படுகிறது.
இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதி இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
உயிரை மாய்த்துக் கொள்ளும்போது அவர்கள் தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள்.
அவர்களுடைய எண்ணத்தை உணர்ந்த எம்பெருமான் தானே ஈமக் கடன்களை செய்வதாக அவர்களுக்கு உறுதி அளித்தார். அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாத எல்லோருக்கும் ஸ்ரார்த்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று சிராத்தம் செய்து வைப்பதாக வாக்களித்தார்.
அதன்படி குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார். எனவே இங்கு சிராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே சிராத்த சம்ரக்ஷணம் ஆகும்.
இந்த சுவாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும். சுவாமி இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார். தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை சிராத்தம் செய்த பலனைக் கொடுக்கும் .
இந்த தலம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது. பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும். அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications