பேரீச்சம் பழம் சாப்பிட்டு.. இஸ்லாமியர் ரமலான் நோன்பு திறக்க காரணம்? பசி, பிணியை போக்கும் அருமருந்து
சென்னை: இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு காலத்தில், நோன்பை திறக்கும்போது, பேரிச்சை பழத்தைதான் முதலில் சாப்பிடுகிறார்கள்.. இதற்கான காரணம் என்ன தெரியுமா? ஆன்மீகம் மட்டுமல்ல, அறிவியல் காரணங்களும் இதற்குள் அடங்கியிருக்கிறது.
ரமலான் பெருநாள் நோன்பினை, இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் கடுமையாக கடைப்பிடிப்பார்கள். சூரிய உதயத்தின்போது, நோன்பை துவங்கி, சூரியன் மறைந்ததும் உணவு அருந்துவார்கள். இந்த இடைப்பட்ட நேரங்களில் ஒரு சொட்டுகூட தண்ணீர் குடிக்கமாட்டார்கள்.

நோன்பு: விடிகாலை முதல் மாலை வரை எச்சில் கூட விழுங்காமல், நோன்பை திறக்கும்போது பேரிச்சம்பழத்தை முதலில் சாப்பிடுவதையே காலம் காலமாக வழக்கத்தில் கொண்டுள்ளார்கள். பேரீச்சம் பழம் சாப்பிட்டு நோன்பு திறந்து, அதற்கு பிறகே மற்ற உணவுகள் உண்ண வேண்டும் என்ற விதிமுறையும் தவறாமல் கடைபிடிக்கப்படுகிறது.
இதற்கு காரணம், இறை தூதரான முகமது நபிகள் நாயகம் நோன்பு இருந்த காலத்தில், அரபிய பாரம்பரியத்தின்படி தண்ணீரும் பேரிச்சை பழத்தையும் சாப்பிட்டுள்ளார்.. முகம்மது நபியின் மிகவும் விரும்பப்படும் உணவுப் பொருட்களில் பேரீச்சம்பழம் ஒன்றாகும். முகம்மது நபி தனது இப்தாரை 3 பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீருடன் தொடங்குவாராம்.
பேரீச்சம்பழம்: அதனால்தான் முகம்மது நபியின் வழிகளை பின்பற்றியே இஸ்லாமியர்கள் அவருக்கு விருப்பமான பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு நோன்பு திறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மற்ற பழங்களை விட, பேரீச்சம் பழம் பற்றி திருக்குரானில் 20 க்கும் அதிகமான முறை குறிப்பிடப்பட்டுள்ளது
ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும்? புதிர் வழியாக புரிய வைக்கிறார் நபிகள். பேரீச்சை மரம் எப்படி பலன் தருகிறதோ, அப்படி இருப்பவரே முஸ்லிம். அந்த மரம் இலைகளை உதிர்ப்பதில்லை. மொட்டை மரம் நமக்கு நிழலையும் தருவதில்லை.. முஸ்லிமின் வாழ்வோ அப்படி கிடையாது. அவர் எல்லா காலத்திலும் பிறருக்கு உதவ வேண்டும். வெயிலுக்கும் மழைக்கும் குடை போல் நிற்கும் பேரீச்சை மரம் போல பிறருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
கம்பீரமான கிளைகள்: அதேபோல, இலையுதிர் காலத்தில் மரங்கள் எல்லாமே அழகை இழந்துவிடும்.. பார்ப்பதற்கே சோகமயமாக காணப்படும்.. ஆனால் ரு முஸ்லிம் எந்த காலத்திலும் மனச்சோர்வோ, முகச்சோர்வோ அடையக்கூடாது. கம்பீரமாக கிளைத்து இலைகளை விரித்து தழைத்து நிற்கும் பேரீச்சை மரம் போல் எந்த நிலைமையிலும் கம்பீரமாக நிற்க வேண்டும்
பேரீச்சை மரத்தின் வேர்கள் முதல் தண்டுகள், கிளைகள், இலைகள், ஓலைகள், நார் உட்பட எல்லாமே பலனை தருவதுபோல, முஸ்லிமும் தமது ஏக இறைவனுக்கு தம்மை முழுக்க அர்ப்பணித்துவிட வேண்டும். பேரீச்சை மரம் தனது மரணத்துக்குப் பிறகும் மக்களுக்கு பலன் தருவது போல் தம்முடைய மரணத்துக்குப் பின்பும் மக்கள் அடையக்கூடிய நல்லறங்களை விட்டுச்செல்ல வேண்டும்" என்றெல்லாம் பேரீச்சைகளின் சிறப்புகள் கூறப்படுகின்றன.
பழத்தின் சத்துக்கள்: இஃப்தார் உணவுகளின் துவக்கமாக மட்டுமல்லாமல், புனித மாதத்தில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் பல இனிப்புகளின் ஒரு பகுதியாகவும் பேரீச்சைகள் உள்ளன.. பேரீச்சம்பழத்தில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் B6, இரும்புச்சத்து, நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பிட்ட அளவு சாப்பிடும்போது, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும்...
உடலில் குளூகோஸ் அளவையும் பராமரிக்க உதவுவதால், நாள் முழுவதும் உணவு, தண்ணீர் இல்லாமல் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு நோன்பு திறக்கும் போதும் உடனடி ஆற்றலை உடலுக்கு இந்த பேரீச்சம்பழம் வழங்குகிறது.. அதுமட்டுமல்ல, பேரீச்சம் பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், நோன்பு இருக்கும்போது, உடலில் நீர் இழப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. பேரீச்சம் பழத்தில் க்ளைசெமிக் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் அதிக நன்மையை தருகிறது.












Click it and Unblock the Notifications