திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திடீரென அமலுக்கு வந்த ஆடை கட்டுப்பாடு!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நெற்றியில் விபூதி, குங்குமம் ஆகியவை கட்டாயமாக்கப்படுகிறது. அவ்வாறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றில்லை எந்த கோவிலாக இருந்தாலும் ஆடை கட்டுப்பாடு என்பதை பலர் கடைபிடித்து வருகிறார்கள். அதாவது பெண்கள் துப்பட்டா இல்லாமல் ஆடை அணிவதில்லை, ஜீன்ஸ், குட்டை பாவாடை உள்ளிட்டவைகளை அணிவதில்லை.

அது போல் ஆண்களும் ஜீன்ஸ், டீசர்ட், ஷார்ட்ஸ், லுங்கி என இல்லாமல் வேட்டி சட்டையோ நார்மல் பேன்ட் சர்ட்டோ அணிந்து கொண்டு செல்கிறார்கள். இந்த ஆடை கட்டுப்பாடு பெரும்பாலான கோயில்களில் கட்டாயமாக உள்ளது.
அந்த வகையில் தற்போது பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் தேவஸ்தானத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு வந்துள்ளது. அந்த வகையில் அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு பணிக்கு வர வேண்டும்.

தினமும் அனைத்து ஊழியர்களும் தங்கள் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைத்திருக்க வேண்டும். அது போல் பெண் ஊழியரக்கள் புடவை ரவிக்கை, சுடிதார் மேல் துப்பட்டாவுடன் அணிந்து, நெற்றியில் திலகம், குங்குமம், ஸ்டிக்கர்களை வைக்க வேண்டும். மேலும் தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒருவரை ஒருவர் மற்றும் பிறரை சந்திக்கும் போது கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாயா என கூறி பேச்சை தொடங்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications