காஞ்சி இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார்- ஆளுநர் ரவி, நயினார், தினகரன் வாழ்த்து!
சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது ஆச்சார்யாராக சத்ய சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் சன்யாச ஆசிரம தீட்சை பெற்றதைத் தொடர்ந்து (இளையமடாதிபதியாகப் பொறுப்பேற்பு) அவருக்கு ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய முறையில் 70வது ஆச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள், 71வது ஆச்சார்யாராக சத்ய சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் அவர்களுக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கிய மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். புனிதமான காமாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்து நமது மக்களின் நல்வாழ்வுக்காகவும் வேண்டிக் கொள்ளும் பாக்கியம் பெற்றேன்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் இன்று பொறுப்பேற்றிருப்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்து சமூகத்தின் மேம்பாட்டில் தங்களது பெரும்பங்களிப்பினை நல்கி வரும், காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களுக்கு, எனது வணக்கங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட காஞ்சி சங்கர மடத்தின் 71- வது இளைய மடாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் சந்யாச தீட்சை வழங்கும் விழாவிற்கு நேரில் சென்று பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி. பழமை வாய்ந்த சங்கர மடத்தின் பாரம்பரியத்தையும் வேத ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவிருக்கும் அவருக்கு எனது நல் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது பாரதம் தர்மகர்ம பூமியாகத் திகழ்வதும், அதன் புண்ணியம் காக்கப்படுவதும் சந்யாசிகள் மற்றும் நம் ஞான குருக்களின் ஆசீர்வாதத்தினாலேயே!
பாஜகவின் கூட்டணி கட்சியான அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது இளைய பீடாதிபதியாக இன்று பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் நல்லாசியோடு இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் புகழ்பெற்ற காஞ்சி மடத்தின் சமூக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான பணிகளை மேலும் பல்லாண்டுகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்: காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு என் வணக்கங்கள்..! அக்ஷய திருதியை நாளான இன்று காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தின் இளைய பீடாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொண்டு சனாதன தர்மத்தை காத்து நிற்கும் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்திற்கும், அதன் பக்தர்களுக்கும் இது பெரும் மகிழ்ச்சியான தருணம். அவர்களது மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். அன்னை காஞ்சி காமாட்சியின் அருளால், காஞ்சி சங்கர மடத்தின் சீரிய பணிகள் மேலும் சிறக்க இன்னாளில் வாழ்த்துகிறேன்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபதியாக, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் இன்று பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது நல்வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் ஆன்மீக மேம்பாட்டிலும், சமூக மேம்பாட்டிலும் பெரும்பங்கு வகிக்கும், தொன்மையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி சங்கர மடத்தின் மேலான பணிகளை, மேலும் பல நூற்றாண்டுகள் கொண்டு செல்ல, இளைய மடாதிபதி ஶ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் நிச்சயம் பெரும்பங்கு வகிப்பார்கள். ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா!
தமிழ்நாடு இந்து முன்னணி: ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் 71வது இளைய பீடாதிபதியாக, ஶ்ரீ ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பொறுப்பேற்றுள்ளார். சனாதன தர்மத்தின் சிறப்பினை உலகத்தில் உயர்த்திட குருவருளும், திருவருளும் ஒன்று கூடி அவரை வழிநடத்தட்டும்.. நமது அநேக கோடி வணக்கங்கள்.












Click it and Unblock the Notifications