இன்று குரு பெயர்ச்சி! ரிஷபத்திலிருந்து மிதுனம் சென்றார்! ஒரே ஆண்டில் 3 முறை குரு பெயர்ச்சியாகிறாராமே
சென்னை: குருபெயர்ச்சியையொட்டி தமிழகத்தில் உள்ள தட்சிணைமூர்த்தி கோயில்களில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயிலிலும் இந்த குரு பெயர்ச்சி விழாவையொட்டி ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜோதிடத்தில் சுபபலனை கொடுப்பவர் குரு பகவான் என்பார்கள். ராசி மண்டலத்தை சுற்றி வர 12 ஆண்டுகளை குரு எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்றும், திருக்கணித பஞ்சாங்கபடி மே 14 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த ஆண்டே 3 முறை குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அதாவது இன்று ரிஷப ராசியிலிருந்து மிதுனத்திற்கும், அக்டோபர் மாதம் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும், பிறகு கடகத்திலிருந்து மீண்டும் மிதுனத்திற்கும் செல்கிறார்.
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பார்வை கிடைக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் குரு பகவான் 1.19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனால் குரு பரிகார ஸ்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயிலில் தட்சிணைமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.
அப்போது மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து வழிபாடு நடத்தினர். தென்காசி மாவட்டம் புளியரையில் உள்ள தட்சிணைமூர்த்தி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவை அன்னூர் அருகே கோயில்பாளையத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலிலும் குரு பெயர்ச்சி நடந்தது. தமிழகத்தில் உள்ள தனிச் சன்னிதி கொண்ட குரு பகவான் கோயில்களில் வரும் 21 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு குருவருளை பெறுவர்.
தஞ்சை மாவட்டம் திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோயில், ஓமாம்புலியூர் துயர் தீர்த்த நாதர் கோயில், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் இருந்து ஆடுதுறை செல்லும் பாதையில் உள்ள திருலோக்கி கோயில், மயிலாடுதுறை மயூரநாதர் கோயில், தேவூர் தேவகுருநாதன் கோயில், கும்பகோணம் கோபோஸ்வரர் கோயில், திருவொற்றியூரில் உள்ள தட்சிணைமூர்த்தி கோயில்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கல் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பல கோயில்களில் யாக பூஜை நடந்தது. பக்தர்கள் பரிகாரங்களையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளையும் செய்தனர்.
இந்த முறை குரு பகவான் 3 முறை பெயர்ச்சி ஆகிறார். அதாவது மே 11 ஆம் தேதி மிதுன ராசிக்கு வருகிறார். அங்கு 5 மாதங்கள் இருக்கும் அவர் அக்டோபர் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை ஒன்றரை மாதங்களுக்கு கடக ராசிக்கு பெயர்கிறார். பின்னர் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு பிறகு மிதுன ராசிக்கே மீண்டும் செல்கிறார் என ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications