சனிப்பெயர்ச்சியை விடுங்க! திருநள்ளாறு சனீஸ்வரரை வணங்குவது எப்படி? நளதீர்த்தத்தில் என்ன செய்யணும்?
காரைக்கால்: திருநள்ளாறில் சனீஸ்வரரை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அங்குள்ள நளதீர்த்தத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்க்கலாம். சனிப்பெயர்ச்சி நாளை இல்லை என்ற போதிலும் கோயிலுக்கு செல்லும் போது இந்த முறையை பின்பற்றலாமே!
இதுகுறித்து ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை
முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும்.

நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும்.
சுவர்ண கணபதி
கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும்.
வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும்.
சனிபகவான்
அவரவர்களுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்காரம், நவ பிரதட்சணம் செய்யலாம். எல்லா நாளும் சனீஸ்வரரை வணங்கலாம்.
திருநள்ளாறு சனிபகவான்
திருநள்ளாறு திருத்தலம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர்.
சனி பகவான் சனி ஓரை
இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ராகு காலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனி ஓரை நேரத்தில் வழிபடலாம்.
சனி ஓரை எப்போது?
அதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி 2025
சனிப்பெயர்ச்சியின் போது திருநள்ளாறு சனீஸ்வர கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி இரவு சனிப்பெயர்ச்சி என திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வருகிறது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டுதான் நடைபெறுகிறது.
சனிப்பெயர்ச்சி எப்போது
எனவே இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறு ஆலயத்தில் கடைப்பிடிப்பதில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "பாரம்பரிய கணக்கு முறைப்படி, 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி நிகழாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். வரும் 29ஆம் தேதி, திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். 2026 ஆம் ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது.
சனிப்பெயர்ச்சி 2026
சனிப்பெயர்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மேலும் நாளையதினம் 29ஆம் தேதி சனீஸ்வரருக்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டுமே நிகழும்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications