Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் | Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Subscribe to Oneindia Tamil

கந்த சஷ்டி கவசம் என்பது முருகப்பெருமானின் திருவருளைப் பெற்று பால தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட புனிதமான தமிழ் இலக்கியப் படைப்பாகும். இந்த தெய்வீக வேதத்தை தினமும் படிப்பவர்களும், பாடுபவர்களும், கேட்பவர்களும் வாழ்க்கையில் எந்தவிதமான துன்பத்தையும் அடைவதில்லை என்பது முருகப்பெருமானின் மீது ஆணையிட்டு கூறப்படும் நம்பிக்கையாகும்.

kandha shasti kavasam

பால தேவராய சுவாமிகள் பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு சென்றபோது, மலையைச் சுற்றி உடல்நோய், மனநோய், வறுமையால் வாட்டமுற்றவர்களைக் கண்டு மனம் நொந்து முருகப்பெருமானிடம் வேண்டினார். அன்று இரவு அவரது கனவில் பழநியாண்டவர் காட்சி அளித்து, உலகில் உள்ளோர் அனைவரும் ஓதி இன்புற்று வாழ ஒரு மந்திரத்தை செந்தமிழில் பாடுமாறு ஆசி வழங்கினார். இதன் விளைவாக 238 அடிகளைக் கொண்ட கந்த சஷ்டி கவசம் உருவானது.

இந்த கவசத்தை ஒருநாளைக்கு 36 முறை ஓதி ஜபம் செய்து திருநீறு அணிபவர்களுக்கு எல்லாப் பிணிகளும் நீங்கும், கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்யும் என்று தேவராய சுவாமிகள் அறுதியிட்டு கூறியுள்ளார். அதிகாலை பொழுதில் மனதை ஒருமுகப்படுத்தி ஓதுவது சிறப்பானது. குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்களிலும், கந்த சஷ்டி விரத காலத்திலும் இதை பாராயணம் செய்வது மிகப்பெரிய பலன்களை அளிக்கும். "முருகா சரணம்" என்று சரணடைந்து இந்த புனித கவசத்தை ஓதுபவர்கள் உடல், உள்ளம், உயிர் அனைத்திற்கும் பாதுகாப்பு பெற்று இன்ப வாழ்வு வாழ்வர்.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

கந்த சஷ்டி கவசத்தின் முழுமையான பாடல் வரிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

குறள் வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்

நிஷ்டையுங் கைகூடும் நிமலர் அருள் கந்தர்

சஷ்டி கவசந்தனை.

காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி.

kandha shasti kavasam

நூல்

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறு முகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறன
வசர ஹணபவ வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை யழகும் இணை முழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொக மொக மொக மொக மொக மொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று
உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலைவைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விழிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரலடியினை அருள் வேல் காக்க
கை களிரண்டும் கருணை வேல் காக்க
முன் கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க
எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்
அடியனைக் கண்டால் அலறி கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
ஆனையடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டியுருட்டு கை கால் முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர் வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப்பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்தரணை பருஅரையாப்பும்
எல்லாப் பிணியும் என்தனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காய்
மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக
உன்னைத் துதிக்க உன்திருநாமம்
சரவணபவனே சைலொளிபவனே
திரிபுரபவனே திகழொளிபவனே
பரிபுரபவனே பவமொழிபவனே
அரிதிருமருகா அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாள் பாலகுமரா
ஆவினன் குடிவாள் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா
சமரா புரிவாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்னா விருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்
கந்தசஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடனாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடனொரு நினைவதுமாகி
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்
கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வசத்துரு சங்காரத்தடி
அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாக
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த
குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குற மகள் மன மகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+