காரைக்கால் அம்மையார் கோவில் திருவிழா..ஜூன் 30ல் மாப்பிள்ளை அழைப்பு..ஜூலை 2ல் மாங்கனி இறைத்தல்
சென்னை: காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா வரும் 30ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்க உள்ளது. ஜூலை 1 ஆம் தேதி பரமதத்தர் புனிதவதி திருமணமும் 2ஆம் தேதி பிச்சாண்டவருக்கு மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்: 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியார் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இங்கு, அம்மையார் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு இவ்விழா ஜூன் 30ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவர் ஆர்.வெற்றிச்செல்வன், துணைத் தலைவர் சி.புகழேந்தி, பொருளாளர் வி.சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஜூன் 30ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு விழாவும் ஜூலை 1ஆம் தேதி பரமதத்தர் புனிதவதி திருமணமும் நடைபெறும். ஜூலை 2ஆம் தேதி பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா மாங்கனிகளை வீசி இறைத்து வழிபடுதல் நடைபெறும்.
பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருவீதி உலா வரும் போது மாங்கனிகளை இறைத்து வழிபடுவது வழக்கம். வேண்டுதலாக பக்தர்கள் இறைக்கும் மாங்கனியை ஏராளமானோர் பிரசாதமாக எடுத்துச்சென்று சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications