ஜோதியான இறைவன்.. மகாலட்சுமி வீட்டிற்குள் குடியேற.. மறக்காமல் விளக்கேற்றுங்கள்
சென்னை: இறைவன் ஜோதி வடிவானவன் என்கின்றன சாஸ்திரங்கள். ஒளி வடிவத்தில் இருக்கும் இறைவனை வணங்கினால் மனதில் உள்ள இருள் விலகும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். மகாலட்சுமி தேவியே தீப ஜோதியாக விளங்குபவள். வீடுகளை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொண்டு மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வணங்கினால் அந்த வீட்டில் லட்சுமி குடியேறுவாள் என்கிறது சாஸ்திரம்.
தெய்வ சக்தி: நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார்.

முப்பெரும் தேவியர்: தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்குள் பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற தொடங்க வேண்டும்.
ஜோதி வடிவான இறைவன்: கார்த்திகை மாதத்தில் கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
தீபம் ஏற்றும் மாதம்: தினம் தினம் மாலை வேளையில் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடலாம். கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
எந்த விளக்குக்கு என்ன பலன்: மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.
எண்ணெய்யின் மகிமை: நெய் தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும். நல்லெண்ணெய் தீபம் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி கிடைக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் தரும். விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்ற அம்மன் அருள் கிடைக்கும்.
தீபம் ஏற்றக்கூடாத எண்ணெய்கள்: கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும். விளக்கு ஏற்றிய பின்பு அது தானாக அணையக்கூடாது. ஒரு சிலர் தீபம் ஏற்றி வைத்து விட்டு மறந்து விடுவார்கள். விளக்கு ஏற்றிய எண்ணெய் இருக்கும் போதே சில மணி நேரங்களில் பூ அல்லது அதற்கென உள்ள குச்சியால் குளிர்விக்க வேண்டும். கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது.












Click it and Unblock the Notifications