கார்த்திகை மாத சந்திர தரிசனம்..கையேந்தி மனதார வேண்டுங்கள்.. சகல பாவங்களும் தீரும்
சென்னை: இறைவனிடம் கையேந்தி யாசகமாக கேட்டால் நம்முடைய கோரிக்கை உண்மையானதாக நேர்மையானதாக இருந்தால் அவற்றை இறைவன் நிச்சயம் நிறைவேற்றுவார். சந்திர பகவான் தாய் காரகன்.. நம்முடைய மனதை ஆள்பவர். இன்று சந்திர தரிசனம் செய்து கையேந்தி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும். சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை.
அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தீர வேண்டும் எனறு இறைவனை வேண்டிக்கொள்வார்கள்.
பொதுவாகவே மூன்றாம் பிறை அன்று, சந்திர தரிசனம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். குழப்பமான நிலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு கூட, சுலபமாக தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம்.
கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமையான இன்று மாலை சந்திர பகவானை தரிசனம் செய்தால் நம் மனதில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் சகல பாவங்களும் தீரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எந்த நட்சத்திர காரர்கள் சந்திரனை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

சந்திர தரிசனம்
சந்திரன் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் வளர்பிறையாக உருவெடுக்கின்றான். இந்த நாளை சந்திரதரிசனம் என்று அழைக்கிறார்கள். வளர்பிறை சந்திரனை தரிசித்தால் செல்வ வளம் பெருகும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். இன்று கார்த்திகை மாதம் சந்திர தரிசனம் கண்டால் கவலைகள் நீங்கும்.

பிறை சூடிய சிவன்
பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக சந்திர தரிசனம் என்று குறிப்பிட்டுள்ளது. பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம். பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

பாவம் போக்கும் பிறை சந்திரன்
"சந்த்ரமா மனஸோ ஜாத" என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும். மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

தோஷம் நீக்கும் சந்திர தரிசனம்
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

சந்திரனின் அருள் கிடைக்கும்
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

நினைத்தது நிறைவேறும்
இன்று மாலை உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கோ அல்லது பால்கனிக்கோ அல்லது வீட்டு வாசலிலோ, எந்த இடத்தில் உங்களுக்கு சந்திரதரிசனம் கிடைக்குமோ அந்த இடத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெறும் கையோடு சந்திர பகவானை தரிசனம் செய்யக்கூடாது. கையில் 1 ரூபாய், 5 ரூபாய் நாணயம் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை சிறிதளவு எடுத்துக்கொண்டு, ஒரு தாம்பாளத் தட்டில் அந்த பச்சரிசியை பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து, உங்களது இரண்டு கைகளையும் ஏந்தி சந்திர பகவானிடம் வேண்டுதல் வைக்க வேண்டும். நல்ல மனதோடு, நீங்கள் வைக்கும் எந்த ஒரு நல்ல வேண்டுதலாக இருந்தாலும், அதனை சந்திர பகவான் நிறைவேற்றுவார்.

ஆயிரம் பிறை கண்ட பலன்
இன்றைய தினம் இந்த சந்திர பகவானை நீங்கள் தரிசனம் செய்துவிட்டால் போதும். அந்த ஆயிரம் முறை தரிசனம் செய்த பலனை பெற்றுவிடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் இந்த சந்திர தரிசனத்தை தவறவிடாமல், வழிபாடு செய்து பலன் பெற வேண்டும்.

சிவ புண்ணியம்
பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானையும் அம்மனையும் அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம் என்பது ஐதீகம். மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான். நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

கடன்கள் நீக்கும் சந்திர தரிசனம்
ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான். ஆறுபிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும். ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும். பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும். வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும். நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்

நினைவாற்றல் கூடும்
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். சந்திர தரிசனம் செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு. வெள்ளிக்கிழமை நாளில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சகல பாவங்களும் தீரும்
அதே போல் சித்திரை, வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications