திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் 27ல் கும்பாபிஷேகம்..யாகசாலை பூஜைகள் கோலாகலம்
சிவகங்கை: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. 27ஆம் தேதி காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோவிலில் உள்ள சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தாயார், ஆண்டாள் மற்றும் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. ராமானுஜர் இங்கு வந்து ஓம் நாமோ நாராயணா என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில்.
திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104 வது திவ்ய தேசம் ஆகும். மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. இத்தலத்தை பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

நரசிம்ம அவதாரம்
பிரம்மதேவனிடம் வரம் பெற்ற இரணியன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தினான். இரணியனை வதம் செய்ய வேண்டும் என்று திருமாலிடம் முறையிட்டனர் தேவர்கள். இரணியனின் தொந்தரவு இல்லாத இடத்தில் இதுகுறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று திருமாலிடம் கூறினர். அந்த நேரத்தில் ஒரு வனத்தில் கதம்ப மகரிஷி திருமாலை நோக்கி தவம் இருந்தார். தான் தவம் செய்யும் இடத்தில் யாரும் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்ய இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அப்போது இரணியனை அழிக்க, தான் நரசிம்ம அவதாரம் எடுக்கப்போவதாக தேவர்களிடம் கூறினார் திருமால்.

திருக்கோஷ்டியூர்
மகிழ்ந்த தேவர்களும் கதம்ப மகரிஷியும் அந்த அவதாரத்தைக் காண விரும்பினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவதாரம் எடுப்பதற்கு முன்பே தன்னுடைய நரசிம்ம கோலத்தை காட்டி அருளினார் திருமால். இதனால் மகிழ்ந்த அவர்கள், திருமாலின் பிற அவதாரங்களையும் காண விரும்பினர். அதன்படி பெருமாளும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என்று நான்கு கோலங்களைக் காட்டி அருள்பாலித்தார், மேலும் இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை அதாவது துன்பம் நீக்கிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்று பெயர் பெற்றது.

சவுமிய நாராயண பெருமாள்
தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். 'ஓம்', 'நமோ', 'நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரணியனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.திருமாமகள் தாயாருக்கு தனிசந்நிதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. மகாவிஷ்ணு இரணியனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.

ராமானுஜருக்கு உபதேசம்
ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவர் திருக்கோட்டியூர் நம்பி. அவரிடம் எட்டெழுத்து மந்திரத்தைப் பற்றி தனக்கு பின்னர் மடத்தையும் வைணவ சமயத்தையும் காக்க வரும் உடையவருக்கு உபதேசிக்குமாறு கூறினார் ஆளவந்தார். மேலும் தகுதியற்றவருக்கு இதைக் கற்பிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.திருக்கோட்டியூர் நம்பிக்கு ராமானுஜரின் பணிவு மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் பதினெட்டு முறை மறுத்து, ராமானுஜரின் தகுதியை சோதித்த பின்னரே அவருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். மேலும் இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். வைகுண்டம் செல்ல உதவும் மந்திரம் என்றும் தெரிவித்தார்.

ஓம் நமோ நாராயணாய
திருக்கோட்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற்றதும் சவுமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு உள்ளே சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்டார். தீர்த்தக் கிணற்றைப் பார்த்தார். கோயில் கோபுரத்தின் மீது ஏறினார். மக்களை அழைத்தார். அனைவரும் வந்தனர். அனைவரையும் வணங்கிய பின்னர் "ஓம் நமோ நாராயணாய" என்ற எட்டெழுத்து மந்திரத்தை எல்லோருக்கும் கேட்கும்படி மூன்று முறை கூறினார்.

ராமானுஜர் சிலை
குருநாதர் வாக்கை மீறிவிட்டதாக ராமானுஜரைப் பார்த்து திருக்கோட்டியூர் நம்பி, சத்தம் போடவே தனக்கு இச்செயலுக்காக நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, உலக மக்கள் அனைவரும் இந்த மந்திரத்தை அறிந்து கொண்டு நற்கதி பெற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று உடையவர் கூறினார். எல்லோரும் சொர்க்கத்திற்கு செல்வதற்காக தான் ஒருவன் நரகத்திற்கு சென்றாலும் பரவாயில்லை என்றும் கூறிய ராமனூஜரை கட்டித்தழுவினார் திருக்கோஷ்டியூர் நம்பி. ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

மகாமகக் கிணறு
இத்தலத்தில் உள்ள சிம்மக் கிணறு மிகவும் புகழ்பெற்றது. இக்கிணறு மகாமகக் கிணறு என்றும் அழைக்கப்படுகிறது. இக்கிணற்றுத் தீர்த்தத்தில் மாசி மகத்தன்று நீராடி இத்தல பெருமாளை தரிசித்தால் நைமிசாரண்யம் தலத்தில் தவம் செய்த பயனும், கங்கை நதியில் நீராடி முக்தி பெற்ற பயனும் குரு தலத்தில் கடுகளவு தங்கம் தானம் செய்த பயனும் கிட்டும் என்பது நம்பிக்கை.

யாகசாலை பூஜைகள்
இத்தகைய சிறப்புபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வருகிற 27ஆம்தேதி காலை கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக நேற்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை நான்காம் கால யாகசால பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 26ஆம் தேதி காலை ஆறாம் கால யாகசாலை பூஜையும், மாலை 3 மணிக்கு ஏழாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 27ஆம் தேதி காலை 8.05 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

மார்ச் 27ல் கும்பாபிஷேகம்
அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோவிலில் உள்ள சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தாயார், ஆண்டாள் மற்றும் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. அதன் பின்னர் 11.50 மணிக்கு ஸ்வர் தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று இரவு 9 மணிக்கு சவுமிய நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோஷ்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications