வைகையில் தவளையாக தவமிருந்த முனிவர்..தங்க கருட வாகனத்தில் வந்து கள்ளழகர் தந்த சாப விமோசனம்
மதுரை: தனக்காக வைகையில் தவளையாக தவமிருந்த மண்டூக மகரிக்கு தங்க கருட வாகனத்தில் ஏறி வந்து சாப விமோசனம் அளித்தார் கள்ளழகர். தேனூர் மண்டபத்தில் இன்று காலையில் முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையின் மகுடமாக திகழும் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் நிறைவடைந்தாலும் அழகரின் வருகையால் மதுரை எங்கும் திருவிழா காய்ச்சல் நீங்கவில்லை.
சைவ வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டாலும் சாதி மதங்களை கடந்த விழாவாக மாறியிருக்கிறது. சுந்தரேஸ்வரரையும் , மீனாட்சியையும், கள்ளழகரையும் கடவுளாக மட்டும் வணங்காமல் தங்களுடன் வாழும் உறவுகளாகவும் மதுரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாசி மாதத்தில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரைக்கு மாறியது. அலங்காநல்லூர், தேனூரில் வைகை ஆற்றங்கரையில் நடந்த விழா மதுரைக்கு வந்தது. இரண்டையும் இணைத்தது மன்னர் திருமலைநாயக்கர். அதற்கு காரணமே மாசியில் அறுவடை காலத்தில் நடந்த தேரோட்டத்திற்கு கூட்டமில்லாமல் போனது. சித்திரையில் அழகரை காண மக்கள் பெருவெள்ளமென கூடினார்கள். இரண்டையும் இணைத்து ஒரே திருவிழாவாக மதுரையில் கொண்டாட வைத்தவர் மன்னர் திருமலை நாயக்கர்.
அழகரின் மதுரை வருகையும் வைகையில் இறங்கும் புராண கதையையும் மக்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' அதாவது தவளையாக போகக் கடவாய்! என சாபமிட்டார்.

உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு என்ன வழி என்று கேட்டார். அதற்கு துர்வாசரோ, விவேகவதி தீர்த்தக்கரையில் நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார் என என்று அதற்கான வழியை சொன்னார்.
அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்கவே கள்ளழகர் வைகையில் இறங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. தனது தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண வரும் போது கால தாமதமாகி விட்டது. இங்கே மதுரையில் திருமணமும் முடிந்து தேரோட்டமும் நடந்து விட்டது. அதை வீர ராகவ பெருமாள் மூலம் தெரிந்து கொண்ட கள்ளழகர் வைகையில் வருத்தத்தோடு இறங்கி வண்டியூருக்கு சென்றார் என்றும் அங்கே தேனூர் மண்டபத்தில் தனக்காக தவளையாக தவமிருக்கும் சுதாபஸ் முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார் என்றும் புராண கதைகள் சொல்கின்றன.

இன்றைய தினம் காலையில் தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கிருந்த மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கி வரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இன்றிரவு வந்து தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார் கள்ளழகர்.
இன்னும் இரண்டு நாட்களுக்கு கள்ளழகர் மதுரையில்தான் தங்கியிருப்பார். அவரின் ஒவ்வொரு அலங்காரத்தையும் கண்டு தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications