திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 7: வாழ்வில் ஏற்படும் தடைகளை தகர்க்க "இந்த" பெயரை சொல்லுங்கள்!
திருப்பாவை - பாடல் 7
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: மதி கெட்ட பெண்ணே! ஆனைச்சாத்தன் என அழைக்கப்படும் வலியன் குருவிகள் கீச் கீச் என அதன் இணையுடன் பேசும் சப்தம் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆயர்குல பெண்கள் தயிர் கடையும் ஓசையும் அவர்கள் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஓசை எழுப்புவது கேட்கவில்லையா? எல்லாரையும் தலைமையேற்று அழைத்து செல்வதாக சொன்னாயே! நாங்கள் எல்லாம் அந்த எம்பெருமான் நாராயண மூர்த்தியை வாயார புகழ்ந்து பாடுகிறோமே அது கேட்கவில்லையா? இப்படி நீ தூங்கும் மர்மம் என்ன? உன் வீட்டு கதவை திறவாயோ!

விளக்கம்: பெருமாளுக்கு எத்தனையோ பெயர்கள் இருக்க கேசவா என்ற திருநாமத்தை சொல்லிவிட்டு அன்றாட பணிகளுக்கு சென்றால் அந்த பணிகள் எந்த தடையும் இன்றி நடக்கும் என்பது ஐதீகம். கேசவன் என்றாலே தடையை நீக்குபவன் என்று அர்த்தம்.
திருவெம்பாவை பாடல் - 7
அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: தாயை விட சிறந்தவளே! உனது சிறப்புகளில் இந்த தூக்கமும் உள்ளதோ! சிவனுக்குரிய திருநீறையும் ருத்ராட்சத்தையும் யாராவது அணிந்திருந்தாலே அவர்களை பார்த்து சிவசிவ என சொல்வாயே! இன்று நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்வது உன் காதில் விழவில்லையா? சிவனின் நாமத்தை சொன்னாலே தீயிலிட்ட மெழுகு போல் உருகுவாயே, இப்போது உன் தூக்கத்திற்கு என்னதான் காரணம். இத்தனை கல் நெஞ்சம் கூடாது! நாங்கள் இவ்வளவு எழுப்பியும் நீ தூக்கத்தை விடாமல் தூங்குகிறாயே, அதை எல்லாவற்றையும் விட மேலான பரிசாக நினைக்கிறாயா?
விளக்கம்: அதிகாலையில் தூங்க கூடாது. இதற்கு சாக்கு போக்காக மார்கழி பனியால் குளிர் நடுங்குகிறது என சொல்லவும் கூடாது. எப்போதும் எல்லா தட்பவெப்பங்களுக்கும் ஏற்றாற் போல் நம் உடலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications