கிரக கோளாறால் நோய் பாதிப்பா?..உங்க வீட்டு கிச்சனில் இருக்கும் பரிகாரம்..அஞ்சறைப்பெட்டி ரகசியம்
அடுப்பங்கறையில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள சமையல் பொருட்கள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நவ கிரகங்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
சென்னை: நமக்கு கண் திருஷ்டி ஏற்பட்டாலோ..நோய்கள் பாதிப்பு ஏற்பட்டாலோ, சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் உருவானாலோ எல்லாம் கிரகக் கோளாறு என்று பெரியவர்கள் சொல்வார்கள். உப்பும், மிளகாயும் வைத்து திருஷ்டி சுற்றி போடுவார்கள். நமது அன்றாட சமையலுக்கு பயன்படுத்துவதற்காக அஞ்சறைப்பெட்டியில் சேமித்து வைத்திருக்கும் பல பொருட்களும் நவகிரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது.
இந்திய சமையலில் அதிகமாக வாசனைப் பொருட்கள், மசாலா பொருட்களை உபயோகிக்கின்றனர். அது உணவின் ருசியை அதிகரிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. கூடவே நமது ஜாதகத்தில் அதிகம் வீக்காக உள்ள கிரகங்களின் பாதிப்பில் இருந்து இந்த சமையல் பொருட்களே பாதுகாக்கிறது.

நமது சமையலில் பெருஞ்சீரகத்திற்கு தனி சிறப்பிடம் உண்டு. ஜீரண சக்தியை அதிகரிக்கும், இந்த பெருஞ்சீரகம் சுக்கிரனின் அம்சமாக திகழ்கிறது. பொதுவாகவே வாசனை பொருட்கள் இருக்குமிடத்தில் சுக்கிரனின் அம்சம் நிறைந்திருக்கும். தினசரி உணவில் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்துக்கொண்டால் அசிடிட்டி பிரச்சினை வராது. சுக்கிரன் வீக்காக இருந்தாலும் பாதிப்புகள் சரியாகும். வெல்லத்துடன் பெருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் நமது வேலைகள் வெற்றியடைய செவ்வாய் கிரகம் உதவி புரிவார்.
மிளகாய், துவரம்பருப்பு செவ்வாய் பகவானின் காரகமாக உள்ளது. பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்றவர்கள் மறைவு ஸ்தானங்களில் செவ்வாய் அமையப்பெற்றவர்கள் செவ்வாய்க்கிழமை துவரம்பருப்பு சாம்பார் வைத்து சாப்பிடலாம். பீட்ரூட் பொறியல் சாப்பிடலாம்.
அன்றாட சமையலில் பயன்படுத்தும் மஞ்சள் குருபகவானின் அம்சமாக திகழ்கிறது. மிளகு சூரியன், சந்திரனின் அம்சமாக திகழ்கிறது. இவற்றை அன்றாட சமையலில் உபயோகிப்பவர்களுக்கு கிரக பாதிப்புகளினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமையில் செய்த உணவுகளை செய்து சாப்பிடலாம். சந்திரனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க பால் பொருட்களால் செய்யப்பட்ட உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.
பிறந்த ஜாதகத்தில் ஏதாவது ஒரு ராசியில் செவ்வாய்,சுக்கிரன் சேர்க்கை இருந்தால் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். கூடவே சளி தொந்தரவுகளும் வரும். இந்த பாதிப்பை தடுக்க லவங்கப் பட்டையுடன் சிறிதளவுடன் தேன் சேர்த்து சுத்தமான நீரில் கலந்து சாப்பிடலாம். இதனால் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பிறந்த ஜாதகத்தில் ஒருவருக்கு சூரியன், சந்திரன் பாதிப்பாக இருந்தால் உடல் நல பாதிப்பு ஏற்படுவதோடு, மனநல பாதிப்பும் ஏற்படும். மழைக்கால சளி தொந்தரவுகள் அதிகரிக்கும். இதை தடுக்க பாலில் மிளகு தூள் கலந்து சாப்பிடுவது சளி தொந்தரவுக்கு நல்லது. தாமிர சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சூரியன் மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதே போல கிட்னியில் கல் பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு பார்லி நன்மை தரக்கூடியது.
புதன் கிரகம் பாதிப்பாக இருந்தால் பார்லி கஞ்சியை தயாரித்து அருந்தலாம். பச்சை நிற காய்கறிகள், கீரை, பாசிப்பயறு போன்ற உணவுகளை சமைத்து சாப்பிட இளம் வயதினருக்கு மந்த புத்தி நீங்கும் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும்.
இந்திய உணவுப்பொருட்களில் மஞ்சள் அதிகம் உபயோகிக்கின்றனர். மஞ்சள் குருபகவானின் அம்சமாகும். ஜாதகத்தில் குருபகவான் பாதிப்பாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் மஞ்சள் நூலினை கழுத்தில் அணிந்து கொள்ள பாதிப்புகள் குறையும். பாலுடன் மஞ்சள் கலந்து சாப்பிட நோய் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
ராகு கேதுவினால் ஏற்படும் பாதிப்பினை பச்சை ஏலக்காய் சரி செய்கிறது. பாலுடன் பச்சை ஏலக்காய் கலந்து 6 வாரங்கள் சாப்பிட்டால் இந்த பாதிப்புகள் சரியாகும். உடம்பில் கால்சியம் சத்தினை அதிகரிக்கிறது. ஜீரண கோளாறுகள் இருந்தாலும் சரி செய்கிறது.












Click it and Unblock the Notifications