சகட தோஷம் போக்கி நிலையான வாழ்வுதரும் மயிலை கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்..பக்தர்கள் பரவசம்
சென்னை: மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கபாலி..கபாலி என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர், முருகன், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் உட்பட 5 தேர்களின் நான்கு மாட வீதிகளில் வலம் வருவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்னும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது கபாலீஸ்வரர் ஆலயம். அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது இங்குதான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான்.
வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான். இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

கபாலீஸ்வரர் கற்பகம்பாள்
இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் சுவாமியும் அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தனர். அதிகார நந்தி, ரிஷப வாகனங்களில் வலம் வந்த சாமி, அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பங்குனி தேரோட்டம்
கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 6 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் 'தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி', 'நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். கூடியிருந்த பக்தர்கள் கபாலி..கபாலி என்று பக்தர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை எட்டியது.

ஜோதிடத்தில் தேர்
ஜோதிடத்தில் சொகுசான வாகனங்களுக்கு காரகன் சுக்கிரன் ஆவார். தேரில் அலங்காரமும் சேர்ந்து இருப்பதால் சுக்கிரன் பொருத்தமானதாகும். சுக்கிரன் என்றாலே அழகு என்பதால்தான் "திருவாரூர் தேரழகு"என்று சொல்கின்றனர். சாதாரணமாக ராஜாகளும், ஆட்சி செய்பவர்பவர்களும் செல்லும் தேர் என்றால் சுக்கிரனோடு நிறுத்திவிடலாம். ஆனால் தெய்வதிருத்தேர் என்றால் மேலும் சில கிரகங்கள் காரகமாகின்றனர்.உயரமான கோபுரம், கொடிமரம், திருத்தேர் போன்றவற்றின் காரகன் சூரியன் ஆகும். மேலும் நவக்கிரகங்களில் ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதங்களின் சப்த ஸ்வரங்கள் குதிரையாகவும் ஏழுநாட்களை குறிப்பதாகவும் 12 மாதங்களை குறிக்கும் 12 ராசிகள் சக்கரமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பகவான்
தேருக்கு தெய்வீக தன்மையை தருபவர் குருவாகும். கோயில் கருவரை போன்ற தன்மை இறைவன் உறையும் இடத்தில் இருப்பதால் தேரின் மைய பகுதிக்கு குரு காரகன் ஆவார். மேலும் பயணத்தின் காரகர் சந்திரன் ஆவார். தேர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வதால் சந்திரனும் காரகம் பெற்றுவிடுகிறார். சனீஸ்வரர் தேரோட்டம் என்பது ஆக்கல் காத்தல் அழித்தல் எனும் தன்மைகளில் அழிக்கும் தன்மையை குறிப்பதாலும் தேர் மெதுவாக செல்லும் தன்மை கொண்டதாலும் சனீஸ்வர பகவானும் காரகனாகின்றனர்.

சகட தோஷம்
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட தோஷமாகும். இது சில நேரங்களில் யோகமாகவும் செயல்படும். இந்த "சகட யோகம்" என்பது என்ன செய்யும்? என்று பார்த்தால் வாழ்க்கையானது ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த யோகம் இருக்கிற ஜாதகர் உண்மையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த யோகமுள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு நாள் பார்த்தால் நல்ல 5 ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பார்கள். திடீரென்று கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள். கடுமையாக போராடும் குணமுடையவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் சிக்கல்
ஒரு மாட்டு வண்டியிலுள்ள சக்கரத்தில் மேலே உள்ள ஒரு புள்ளி கண்டிப்பாக கீழே வந்தே ஆக வேண்டும், அதே போல கீழே வந்த புள்ளி மீண்டும் மேலே போயே தீர வேண்டும். இது சுழற்சி. இதையே யாரவது மாற்ற முடியுமா? அது போல தான் இவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும். பெரும்பாலும் இவர்களை வீழ்ந்து விட்டார்கள், இவர்கள் அவ்வளவு தான் என்று நினைக்கும் போது இவர்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்பார்கள். அதே போல் சடார் என்று கீழேயும் வீழ்ந்து விடுவார்கள்.

தோஷம் நீக்கும் தேரோட்டம்
தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகட தோஷத்தை போக்கி ஏற்ற இரக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும். இன்றைய தினம் கபாலீஸ்வரர் தேரோட்டம் பார்பவர் அனைவரும் நிலையான வாழ்வை பெற்றுவிடுவர். சகட தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. தேருக்கு அழிக்கும் தன்மை கொண்ட சனி காரகம் பெற்றிருப்பதால் நம்மிடம் இருக்கும் கன்மம், மலம், மாயை எனும் மும்மலங்களும் அழியும். சனி ஆயுள் காரகர் என்பதால் மரணத்தை அழித்து நீண்ட ஆயுளை தந்துவிடுவார். மேலும் சூரிய சனி இணைவு அரசாங்க உயர்பதவிகளையும் பெற்றுவிடுவார்கள். குருவும் சூரியனும் சேர்ந்து நிற்பதால் கௌரவம் மேலோங்கும். குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் புத்திரதோஷம் நீங்கும். சனி சந்திர சேர்க்கை பெற்றிருப்பதால் புணர்ப்பு தோஷம் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும்.












Click it and Unblock the Notifications