திருப்பதி லட்டு தயாரிப்பில் புதிய மாற்றம்..கட்டண சேவைக்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இன்று ஆரம்பம்
ஏழுமலையான் கோவிலில் தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம், சுப்ரபாதம் போன்ற சேவைகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை கல்யாண உற்சவம், கட்டண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளத் தேவையான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதேபோல பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம், சுப்ரபாதம் போன்ற சேவைகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் இன்று 10 மணி முதல் 10ஆம் தேதி பத்து மணி வரை தேவஸ்தான இணையதளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்த பக்தர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

இது போன்ற கட்டண சேவைகளில் நேரடியாகப் பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று பகல் 12 மணிக்குத் தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் பணக்கார கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் ஒன்று. பூலோக வைகுண்டமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த காரணத்தினால் 1500 கோடியைத் தாண்டி வருவாய் வந்து கொண்டிருக்கிறது. 1933 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே மிகப்பெரிய உண்டியல் வருவாய் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டுவிற்கு தனித்துவம் உண்டு.
திருப்பதி லட்டு போல் வேறு எந்த இடத்திலும் தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை தனித்துவமாக இருக்கும். அதற்காகவே இந்த லட்டுக்கு மவுசு அதிகம். கடந்த நிதியாண்டில் லட்டு விற்பனை மூலம் 365 கோடி ரூபாய் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வருவாய் ஈட்டி உள்ளது. தற்போது வரை இந்த பிரசாதம் கையால் பிடித்துத் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கிளைக் கோயில்கள் பல்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கின்றன. அந்த அனைத்து கோயில்களுக்கும் திருப்பதியிலிருந்து லட்டு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. வேறு எங்கும் தயாரிக்கத் தேவஸ்தானம் அனுமதி தரவில்லை. இதுநாள் வரை லட்டு தயாரிக்க ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.
தற்போது இதனைத் தயாரிக்க ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. உயர்தர இயந்திரங்கள் மூலம் லட்டு தயாரிக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம்,வெளியிட்டுள்ள அறிவிப்பில், லட்டு தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்களை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க முன் வந்துள்ளது. இதன் மூலம் லட்டு தயாரிப்பதற்கான அனைத்து விஷயங்களும் இயந்திர மயமாக்கிவிடும் எனத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications