திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரம் கோலாகல தொடக்கம்.. தெய்வானை திருக்கல்யாணம் பார்க்க வாங்க!
மதுரை: அசுரர்களை வென்ற முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளன்று திருமணம் செய்து கொடுத்தார். இத்திருநாளே பங்குனி உத்திர திருநாளாக கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. 15 நாட்கள் கொண்டாடப்படும் பங்குனி பெருவிழாவின் முக்கிய அம்சமான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் வரும் 28ஆம் தேதி மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் நடைபெறுகிறது.
தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது.

ஞானத்தின் வடிவான முருகப்பெருமான் கிரியாசக்தியை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தெய்விக நிகழ்வே முருகன் தெய்வானை திருமணம். 'நான்முகன் வேதம் ஓத, சூரிய சந்திரர்கள் தீபங்கள் ஏந்தி நிற்க, சிவ சக்தியர் ஆசி வழங்க, இந்திரன் தெய்வானையைத் தாரை வார்த்துக் கொடுக்க, சுப்பிரமணியக் கடவுள் தெய்வானையைத் திருமணம் செய்துகொண்டார்' என்று முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் நடைபெற்ற திருமணம் பற்றி திருப்பரங்குன்றம் தலபுராணம் விவரிக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருப்பரங்குன்றம் முருகன் கோவில். இந்த கோவிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 15 நாட்களும் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் மக்களைக் காண நகர்வலம் வந்து அருள்பாலிப்பார்.

மார்ச் 21ஆம் தேதி கைபாரம் நிகழ்ச்சி நடைபெறும். 24ஆம் தேதி பவுர்ணமி பங்குனி உத்திரம் நடைபெறும். முக்கிய விழாவான பட்டாபிஷேகம் மார்ச் 27ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் நடைபெறும். மார்ச் 28ஆம் தேதி பகல் 12.30 முதல் 12.50 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். முக்கிய விழாவான தேரோட்டம் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும். மார்ச் 30ஆம் தேதி தீர்த்தம் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முருகன் தெய்வானை உடன் மணக்கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கும் ஒரே தலம் முதற்படை வீடான திருப்பரங்குன்றம்தான். முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பங்குனி உத்திர விழாவில் 11ஆம் நாள் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத் தூணில் தெய்வானை கல்யாணக் காட்சியைக் கண்டு மகிழலாம். இந்திரன் கன்னிகாதானம் அளிக்கும் கோலத்தில் உள்ளார்.
முருகன் தெய்வானை திருமணத்தில் பங்கேற்க மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மகனின் திருமணத்திற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வருவதால் அன்றைய தினம் மாலை வரை கோவில் நடை அடைக்கப்படும். திருக்கல்யாணத்திற்காக சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்படுவது சிறப்பம்சம்.
தெய்வானை முருகப்பெருமான் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தால் தடைகளை தாண்டி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமண தடை உள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் உடனே கிளம்பி திருப்பரங்குன்றத்திற்கு வாங்க.












Click it and Unblock the Notifications