பங்குனி உத்திரம்.. விரதமிருந்து முருகனை வணங்கினால் திருமணத்தடை நீங்கும்.. கல்யாண வரம் கைகூடும்
சென்னை: பார் புகழும் பழனியிலே பங்குனித் தேரோட்டம் காண்பது சிறப்பு. பங்குனி உத்திரம் திருவிழா முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் சிறப்பு. பங்குனி மாதத்தில் பவுர்ணமி திதியும் உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வருவது சிறப்பு. இந்த நாளில் முருகப்பெருமான் ஆலயங்களிலும் சிவபெருமான் ஆலயங்களிலும் திருக்கல்யாண விழா களைகட்டும். பங்குனி உத்திரம் நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானையும் சிவபெருமானையும் வழிபட்டால் கல்யாண வரம் கைகூடி வரும்.
12 கரத்தவன் முருகப்பெருமான். ஆறுமுகக் கடவுளுக்கு பங்குனி உத்திரம் நாளில் பலரும் தீர்த்தக் காவடி எடுத்து வந்து வழிபடுவார்கள். 12வது மாதமான பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணைவதை தான் பங்குனி உத்திரம் என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு மற்றொரு சிறப்பும் இணைந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு பங்குனி உத்திரம் பங்குனி 12 ம் தேதியன்று கூடி வருகிறது. அனைத்தும் 12 என முருகனுக்குரிய எண்ணில் வருவது சிறப்பு வாய்ந்தது.

பல்வேறு சிறப்புகளையும், பெருமைகளையும் பெற்ற பங்குனி உத்திர திருவிழா சிவ பெருமான், முருகப்பெருமான் ஆலயங்களில் மட்டுமல்லாது பெருமாள் ஆலயங்களிலும் சிறப்பு வாய்ந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள பங்குனி மாதத்தில் முருகபக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு கொடுமுடி சென்று காவிரி ஆற்று நீரை தீர்த்த காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்வது, தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும்.
பங்குனி உத்திர திருவிழா நாளன்று பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து, பழனியில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். பங்குனி உத்திரம் இந்த ஆண்டு மார்ச் 25 ம் தேதி வருவது காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மார்ச் 24ம் தேதி காலை 11.17 மணிக்கே பெளர்ணமி திதியும், காலை 08.46 மணிக்கே உத்திரம் நட்சத்திரமும் துவங்கி விடுகிறது. மார்ச் 25ம் தேதி பகல் 01.16 வரை பவுர்ணமி திதியும், காலை 11.19 வரை உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இதனால் மார்ச் 24, மார்ச் 25 இவற்றில் எந்த நாளை பங்குனி உத்திர நாளாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும் என குழப்பம் பக்தர்களிடம் ஏற்பட்டுள்ளது.

பவுர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் மார்ச் 24ஆம் தேதியே துவங்கி இருந்தாலும் அன்று காலை சூரிய உதய நேரத்திற்கு பிறகே இரண்டும் துவங்குகின்றன. எனவே ஒரு நாளின் சூரிய உதய நேரத்தின் போது என்ன திதி, நட்சத்திரம் உள்ளதோ அதுவே அந்த நாளுக்கான திதி மற்றும் நட்சத்திரமாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மார்ச் 25ம் தேதி சூரிய உதய நேரத்தின் போது தான் பவுர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வருகின்றன. இதனால் மார்ச் 25ம் தேதியை தான் பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு பக்தர்கள் விரதம் இருக்க வேண்டும்.
கல்யாண வரமளிக்கும் இந்த நாளில்தான் திருமகள் விரதமிருந்து திருமாலின் திருமார்பில் இடம்பிடித்தாள். அதைப்போலவே கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள். பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான். எனவே, இந்த நாள் லட்சுமி கடாட்சமாக விளங்குகிறது. உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திரபகவான் இந்த நாளில் களையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான். அப்போது சந்திரனை வணங்கினால் குடும்ப வாழ்வு சிறப்படையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில்தான்.
பங்குனி உத்திர நாளில், 'கல்யாணசுந்தர விரதம்' இருந்து வழிபட்டால், திருமணம் தடைப்படுபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவதுடன், இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும். பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களில் வழிபாடு செய்து, புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது சுமங்கலிகளின் வழக்கம். சிவபெருமான் அம்பாளைக் கரம்பிடித்த நன்னாளில், பசுவாகிய தங்கள் ஆன்மா, பதியாகிய சிவனை அடைய வேண்டும் என்பதற்காக சிவனடியார்கள், 'கல்யாணசுந்தர விரதம்' அனுஷ்டிப்பார்கள். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திரத் திருநாளில் விரதமிருந்து வழிபட்டால், அடுத்த பிறவியில் தெய்வநிலையை அடைவார்கள் என்பதும் ஐதீகம்.
பங்குனி உத்திர நாளில் இந்திய தேசத்திலுள்ள புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியிலுள்ள எட்டு புனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. இந்த நாளில் வெங்கடாசலபதியை வணங்குவதும், புனித நீராடுவதும் சிறப்பானவை.
வைணவ தென்கலைப் பிரிவின் மஹா ஆசார்யரான ஸ்ரீராமாநுஜர் பெருமாளைத் தொழுது சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம் என்ற மூன்று வசனக் கவிதைகளைப் பாடியதால் 'உடையவர்' என்ற பதவியை திருமாலிடமிருந்து பெற்றார். இந்தப் பதவியை ஸ்ரீராமாநுஜர் பெற்ற நாள் பங்குனி உத்திரம். ஸ்ரீரங்கம் ஆலயத்தின் 'சேர்த்தி வைபவம்' நடைபெறுவதும் இந்த நாளில்தான். ரங்கநாத பெருமாள் - ரங்கநாயகி தாயார் ஊடல் கொண்டு சண்டையிட்டுக்கொள்வதும், பின்னர் இணைவதும் இந்த நாளின் விசேஷம்.
இந்த வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தைப்போலவே இந்த நாளில் காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், மலையாள நாச்சியார் மற்றும் பெருந்தேவித் தாயார் சமேதராக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார். இந்த வைபவம் பங்குனி உத்திரத்தன்று மட்டும்தான் நடைபெறுகிறது.
பூ முடித்தல், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமண ஓலை எழுதுதல், சீமந்தம், புதிய பொருள்கள் வாங்குதல், புதிய சிகிச்சை மேற்கொள்ளுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், செடி நடுதல், வணிகம் தொடங்குதல், வேலையில் சேருதல், புதிய இடத்துக்கு மாறுதல், நீர் நிலைகளை உருவாக்குதல், போர்ப்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் பங்குனி உத்திரத் திருநாள்.
எண்ணற்ற பல மங்களகரமான, தெய்விக நிகழ்வுகள் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருநாளில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம். பங்குனி உத்திர நாளில் நீர் மோர் வழங்குதல், விரதமிருத்தல், தெய்வத் திருமணங்களை தரிசிப்பது, அன்னதானம் செய்வது போன்றவை பெரும் புண்ணியத்தைத் தரும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications