அயோத்தியில் ராமர் குடியேறும் அபிஜித் முகூர்த்த காலம்.. தினமும் வேண்டினால் என்னென்ன நன்மைகள்
சென்னை: நம்மை படைத்த இறைவனுக்கே சில புராணங்களில் அபிஜித் நேரத்தில் வெற்றி தந்ததாக வரலாறுகள் உள்ளன. ரிஷிகளும், முனிகளும் மட்டுமன்றி, தேவர்களும், தெய்வங்களும் கூட இந்த நேரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். அயோத்தில் இன்றைய தினம் ராமர் கோவில் கருவறையில் பால ராமர் பிரதிஷ்டையும் அபிஜித் முகூர்த்த காலத்தில் நடைபெற உள்ளது.
அதிர்ஷ்டம் தரும் அபிஜித்: அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் பற்றி தெரியும். அபிஜித் என்ற பெயரில் ஒரு நட்சத்திரமும், முகூர்த்தகாலமும் உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும். அபிஜித் என்றால் வெற்றி, அபிஜித் என்றால் அதிர்ஷ்டம் தரவல்லது நட்சத்திரங்களில் 28வது நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரத்தை சொல்வார்கள். அதேபோல அபிஜித் முகூர்த்தகாலமான பகல் முடிந்து உச்சிகாலம் ஆரம்பிக்கும் அந்த முகூர்த்த காலமும் நல்லதையும் வெற்றியையும் தேடித்தரும்.

அபிஜித் நேரம் எப்போது: 12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் நேரம் என்றாகிறது. சுப நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் அபிஜித் நேரத்தை பயன்படுத்துவார்கள். 'ஜித்' என்றால் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். 'அபிஜித்' என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது அர்த்தமாகும்.
அபிஜித் நட்சத்திரம்: நல்லகாரியங்கள் செய்ய நல்ல நேரம் பார்க்க வேண்டும். ஆனால் சூரியன் உதயகாலம், அஸ்தமனகாலம், உச்சிகாலம் தோஷமற்ற நேரங்கள் இந்த நேரத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யலாம். ஏனெனில் திதி, கிழமை, நட்சத்திர தோஷ காலங்கள் கிடையாது. நட்சத்திரங்களில் 28வது நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரத்தை சொல்வார்கள். திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் கேள்விக்குறி போன்ற தோற்றத்துடன் காணப்படும் நட்சத்திரமே அபிஜித் நட்சத்திரமாகும்.
காரிய வெற்றி தரும் அபிஜித்: இதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த நட்சத்திரத்தை பார்த்துவிட்டால் அனைத்து காரியங்களும் வெற்றி தான். அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் மிக்கவர்கள். அன்பும், கண்டிப்பும் மிக்கவர். தலைமை பண்பும் சேவை மனமும் கொண்டவர்கள். தொழில் கெளரவம் மிக்கவர்கள், செய்யும் தொழில் மீது பற்றுக்கொண்டவர்கள். சுகமும் மகிழ்ச்சியும் மிக்கவர்கள்.
தர்ம குணம் அபிஜித்: தாய், தந்தை இருவருக்கும் பிடித்த பிள்ளை. தாய், தந்தை இருவரின் குணமும் ஒருங்கே உள்ளவர். தாய், தந்தை இருவருவரின் சாயலும் உள்ளவர். கல்வி விசயத்தில் கவனம் தேவை, தடைபட வாய்ப்பு உண்டு. தொழிற்கல்வி சிறப்பு தரும். தர்ம குணம் உள்ளவர்கள். மருத்துவ துறையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு. தொடர் முயர்ச்சியாளர். அறிவாளிகளை உடன் வைத்து இருப்பவர். ஆன்மீக பற்றும் தன்னம்பிக்கையும் ஒருங்கே கொண்டவர்கள்.
வெற்றிகள் கிடைக்கும் அபிஜித்: அதேபோல அபிஜித் முகூர்த்தகாலமான பகல் முடிந்து உச்சிகாலம் ஆரம்பிக்கும் அந்த முகூர்த்த காலமும் நல்லதையும் வெற்றியையும் தேடித்தரும். தினமும் நண்பகல் உச்சி நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும்.
தொழில் வளர்ச்சி: புதிய தொழில், வேலை, முதலீடு உள்ளிட்ட நிதி தொடர்பான விஷயங்கள், புது வீடு குடிபோதல், செல்வ வளத்திற்கான பூஜை ஆகியவற்றை செய்வதால் அதிர்ஷ்டம், வளர்ச்சியை தரும். இந்த நேரத்தில் துவங்கப்படும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரக் கூடியதாகும். திங்கட்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கவும்,மேலதிகாரிகளின் தொந்தரவு தீரவும் வேண்டிக்கொள்ளலாம்.
வெளிநாடு செல்லும் யோகம்: அதே போல வீடு யோகம் அமையவும் கடன் தீரவும் செவ்வாய்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம். குழந்தை பாக்கியம் பெறவும், இழந்ததை மீட்கவும் புதன்கிழமை வேண்டிக்கொள்ளலாம். வியாழக்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டினால் வெளிநாடு செல்லும் யோகமும் கல்வியில் மேன்மையும் கிடைக்கும்.
வழக்குகளில் வெற்றி: திருமணம் நடைபெறவும் விரும்பியவரை திருமணம் செய்யவும் வெள்ளிக்கிழமைகளில் அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம். சனிக்கிழமை வேண்டினால் வம்பு வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும். ஞாயிறு அபிஜித் முகூர்த்த வழிபாடு வினைகள் அகலவும் உடல் நலம் மேம்படவும் வேண்டிக்கொள்ளலாம்.
சிறப்பான நாள்: குழந்தை ராமரின் சிலையானது இன்றைய தினம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இன்றைய தினம் கூர்ம துவாதசி. மிருகசீரிடம் நட்சத்திரம் உள்ளது. இன்றைய தினம் அபிஜித் முகூர்த்த நேரத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல, ஜோதிட ரீதியாகவும், வானியல் சாஸ்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு மிக கவனமாக ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான நாளும், முகூர்த்த நேரமும் குறிக்கப்பட்டுள்ளது.
விளக்கேற்றி வழிபடுங்கள்: புராணங்களின் படி சிவ பெருமான், திரிபுராசுரன் என்ற அசுரனை வதம் செய்தது அபிஜித் முகூர்த்தத்தில் தான் என சொல்லப்படுகிறது. அதனால் இது அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கக் கூடிய நேரம் என சொல்லப்படுகிறது. வாழ்வில் உள்ள அனைத்து விதமான துன்பங்களும் நீங்குவதற்கும் இந்த நேரத்தில் நம்முடைய வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடலாம்.












Click it and Unblock the Notifications