திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் அன்னதானம் வழங்க எவ்வளவு நன்கொடை தெரியுமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் அன்னதானம் வழங்க விரும்புவோர் ரூ 44 லட்சம் நன்கொடை செலுத்தலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழா நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகிறார்கள்.

பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கூட ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்கள் வயிறார உணவு அருந்த 3 வேளையும் திருமலையில் மாத்ரூ ஸ்ரீதரிகொண்டா வெங்கமாம்பாள் அன்னதான கூடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாத திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், நன்கொடைகள் மற்றும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாத்ரூ ஸ்ரீ வெங்கமாம்பாள் கூடம் தவிர திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜர் கோயில், விண்ணு நிவாசம், மாதவம் விடுதிகள் என பல இடங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் பயனடைகிறார்கள்.
பக்தர்கள் மட்டுமல்லாமல் அங்கு கார் ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், கடை வைத்திருப்போரும் பேருந்து நிலையத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு பசியாற்றிக் கொள்கிறார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதால் இந்த திட்டத்திற்கு பக்தர்கள் தாராளமாக நன்கொடை வழங்குகிறார்கள். இந்த நிலையில் ஒரு நாள் அன்ன பிரசாதத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் ரூ 44 லட்சம் செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
காலை சிற்றுண்டிக்கு மட்டும் என்றால் ரூ 10 லட்சமும் மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு ரூ 17 லட்சம் என நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications