ஐயப்பனை காண வாருங்கள்..ஆராட்டு விழாவில் ஆசீர்வதிக்கும் அய்யன்! சபரிமலை நடை திறப்பு எப்போது தெரியுமா?
திருவனந்தபுரம்: உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதான நடையானது நாளை திறக்கப்பட இருக்கிறது. பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் இரண்டாம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெற்றது. சபரிமலையில் கடந்த 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.

பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகரஜோதியை 'சுவாமியே சரணம் ஐயப்பா" என கோஷம் விண்ணைப் பிளக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 20ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்பனை வளர்த்த பந்தளம் மன்னர் சார்பாக பிரதிநிதியான ராஜ ராஜ வர்மன் ஐயப்பனை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி மன்னர் பிரதிநிதி முன்னிலையில் ஐயப்பனை யோக நிலையில் அமர்த்தி நடையை அடைத்து, பிறகு 18 படி வழியாக கீழே வந்து கோயிலுக்கான சாவியையும் இந்த ஆண்டு வருமானத்தை பந்தள மன்னர் குடும்பத்திற்கு ஒப்படைக்கும் வகையில் பண முடிப்பை வழங்கினார். அதையெல்லாம் கோயில் நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும் மன்னர் பிரதிநிதி வரும் காலங்களில் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என கூறி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட திருவாபரண பெட்டியை பெற்றுக் கொண்டு சென்றார்.
தொடர்ந்து ஐயப்பனின் திருவாபரண பெட்டி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பந்தள அரண்மனையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சபரிமலை நடை அடைக்கப்பட்டது. சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை, மட்டுமல்லாது மாசி மாத பூஜை, பங்குனி ஆராட்டு விழா, சித்திரை விஷு உள்ளிட்ட முக்கிய நாட்களிலும் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் மாசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு ஐயனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நடை அடைக்கப்பட்ட நிலையில் நாளை பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை நடை திறக்கப்படுகிறது.
ஏப்ரல் இரண்டாம் தேதி பங்குனி ஆராட்டு விழாவுக்கு கொடியேற்றம் நடைபெற இருக்கும் நிலையில் நாளை கோவில் நடை தந்திரி தண்டரர் ராஜீவரர் முன்னிலையில் சபரிமலையில் மேல் சாந்தியான அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யாபிஷேகம், உஷ பூஜை ஆகிய பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து இரண்டாம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும் இரவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது. முன்னதாக படி பூஜையும் நடைபெறும்.
தொடர்ந்து சில நாட்களில் சித்திரை விசு பண்டிகையும் வருவதால் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications