திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு போறீங்களா? சீனியர் சிட்டிசன்களுக்கு குட் நியூஸ்! இனி ஈஸி!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி 60 முதல் 70 வயது வரையுள்ளவர்கள் கூட்டத்தில் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேராக போய் முருகனை பார்த்துவிட்டு வந்துவிடலாம்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடந்த 16 ஆண்டுகள் கழித்து ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.

ஆவணி திருவிழா நடைபெறவுள்ளதால் 48 நாட்களுக்கு பதிலாக 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன.
அதன் பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு செந்தில் ஆண்டவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கோடை விடுமுறையின் போதிலிருந்தே தினந்தோறும் கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
மேலும் சுவாமியை தரிசனம் செய்வதற்கான நேரமும் அதிகரித்தது. இதனால் இந்த கூட்ட நெரிசலில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என சிக்கித் தவித்தனர். ஆடி மாதத்தில் இரு கிருத்திகைகள் வருகின்றன. ஒன்று ஜூலை மாதம் போய்விட்டது. இன்னொன்று ஆகஸ்ட் 16ஆம் தேதியாகும். இதனால் முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயில் திருப்பணி பணிகள் முழுமையாக நிறைவடையாமல் உள்ளன. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முருகனை தரிசிக்க தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது 60 வயது முதல் 70 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் இந்த வழியில் அனுமதிக்கப்படுவார்கள். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குமடிக்களுடன் மட்டுமே துணைக்கு ஒருவர் அனுமதிக்கப்படுவர். மூத்த குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும்.
அது போல் மாற்றுத்திறனாளிகள், அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். இந்த தனிவழியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியை போல் திருச்செந்தூரில் தற்போது காத்திருக்கும் அறைகள், தனித்தனி கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் திருப்பதியை போல் திருச்செந்தூரில் விரைவு தரிசனம் செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் வாட்ஸ் ஆப் மூலம் தரிசன டிக்கெட் முன் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications