குளிக்கும் போதும் சாப்பிடும் போதும் இந்த தவறு செய்யாதீர்கள்.. திசை ரொம்ப முக்கியம்.. ஆன்மீக டிப்ஸ்
சென்னை: சாப்பிடும் போது எந்த திசை நோக்கி சாப்பிட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது அதே போல குளிக்கும் போது நாம் எந்த திசையை பார்த்து நின்று குளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குளிப்பது உடல் அழுக்கை போக்குவதற்கு மட்டுமல்ல அது உடல் சூட்டினை சரியான வகையில் தக்கவைக்கவும் தான். காலையில் குளிப்பது நல்லது. நாம் குளிக்கும்போது, சுடுநீரைப் பயன்படுத்தாமல், சாதாரண நீரையே பயன்படுத்தவேண்டும். தண்ணீரை தலையில் எடுத்த உடனே ஊற்றக்கூடாது. நீரை முதலில் காலில் இருந்து ஊற்றி, பிறகு தொடை மற்றும் இடுப்பில் அதிக நீர் ஊற்றி, தண்ணீரின் அந்த வெப்பநிலையை, உடல் ஏற்க தயார்செய்யவேண்டும்.

ஒரு சிலர் முதலிலேயே தலையில் நேரடியாக தண்ணீரை ஊற்றி குளிப்பார்கள். அப்படி குளித்தால் குளிர் தாக்கும் எனவே நாம் குளிக்கும்போது எப்போதும், சிறிது நீரை உச்சந்தலையில் ஊற்றிவிட்டு, அதன்பின் குளியலைத் தொடங்குவது நலம். அதே போல நாம் குளிக்கும் போது நின்று குளிக்கும் திசை ரொம்ப முக்கியம்.
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் குளிக்கும் போது வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது மீறி குளித்தால் அவர்களுக்கு உடல்ரீதியான நோய்கள் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. தெற்கு திசையை தவிர்ப்பது நல்லது. ஒருவர் கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அதே போல குளித்து முடித்ததும், துடைத்துக்கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. ஏனென்றால், நாம் தினமும் குளிக்கும்போது , நம் உடலில் வந்து அமர்வதற்கு மகாலக்ஷ்மியும் அவரது அக்கா மூதேவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வாசலில் காத்துகொண்டு நிற்பார்களாம். நாம் குளித்து முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு போட்டி. இதன் முடிவில் அக்காதான் முதலில் சென்று உட்காரவேண்டும் என்பதுபடி நாம் குளித்து முடித்தவுடன், தலையை முதலில் துவட்டிக் கொண்டால், அங்கு மூதேவி வந்து அமர்ந்தால், நம் புத்தி வேலை செய்யாது.
குளித்த உடன் முதலில் முதுகை துடைக்கவேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அப்போது தான் மூதேவி முதுகில் அமர்வாள்.அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி வந்து அமரும் போது, நாம் முகம் தெளிவாகவும்,சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பும் கிடைக்கும். முதலில் முகத்தை துடைத்துகொண்டால் மூதேவி வந்து அமர்ந்து நமது முகப்பொலிவு மாறி விடும். குளித்த பிறகே சாப்பிட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அதே போல நாம் சாப்பிடும் போதும் சில சாஸ்திரங்களை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு முன்பாக நாம் கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். சாப்பிடும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து சாப்பிடக்கூடாது. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. சாப்பிடும் போது உணவில் மட்டுமே நாம் கவனமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் செருப்பு அணிந்து கொண்டு சாப்பிடக்கூடாது.
இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ சாப்பிடக்கூடாது. ஒரு சிலர் நிலா சாப்பாடு சாப்பிடுவார்கள். அது சம்பிரதாயத்திற்கு ஏற்றது. அதே நேரத்தில் நிலவின் ஒளியில் தனியாக உண்ணக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம். வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. கிழக்கு, மேற்கு, தெற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடலாம்.
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. அதிக கோபத்துடனோ வன்மத்துடனோ உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications