செய்வினை தோஷம் போக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார்.. சுதர்சனரை வழிபட்டால் நவகிரக தோஷங்களும் நீங்கும்
மதுரை: ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். பேய் பிசாசு, பில்லி சூன்யம் செய்வினை தோஷங்கள் பற்றிய அச்சங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஆனி மாதத்தில் சித்திரை நட்சத்திர நாளில் அவதரித்தவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர்.
ஆழ்வார்களில் மூத்தவர் என்று ஆராதிக்கப்படுபவர் ஸ்ரீசுதர்சனர். இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர். பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. அவரது அவதார தினம் பெருமாள் ஆலயங்களிலும் இந்த ஆண்டு சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழாவாக புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.
சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம். பயங்கரமான கனவு, சித்தபிரமை, பேய், பிசாசு, பில்லி, சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க சுதர்சனரை வழிபடலாம். சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார்.
பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம், அது பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் வணங்குவது சிறப்பு. முடிந்தால் தினமும் வணங்கலாம். வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். ஸ்ரீ மகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக 'சுதர்ஸன சதகம்' விளக்குகிறது. சக்ரத்தாழ்வார் அவதார தினமான நாளைய தினம் புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை வணங்கி வாழ்வில் மகிழ்ச்சியை அடைவோம்.












Click it and Unblock the Notifications