Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகுண்ட ஏகாதசி.. ஸ்ரீரங்கத்தில் நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடக்கம்.. 23ல் சொர்க்கவாசல் திறப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை 12ஆம் தேதி செவ்வாய்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 23ஆம் தேதியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி: மாதங்களில் நான் மார்கழி என்கிறார் மகாவிஷ்ணு. அத்தகைய சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.

Sri Rangam Ranganathar Temple Vaikunta Ekadasi festival begins with Tirunedunthangam on Tomorrow

ஏகாதசி திதி: மொத்தமுள்ள 30 திதிகளில் வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி உள்ளது. ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம்.

வைகுண்ட ஏகாதசி கதை: இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார்.

மகாவிஷ்ணு: பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான். அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், 'ஹூம்' என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.

சகல செல்வம் கிடைக்கும்: அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.

வரம் கேட்ட அசுரர்கள்: இதே போல மற்றொரு புராண கதையும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

பரமபத வாசல்: மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக்கொண்டு, ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.

சொர்க்கவாசல் திறப்பு: மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். மகாவிஷ்ணுவும் அப்படியே வரம் கொடுத்தார்.

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு சிகர நிகழ்ச்சியாகும்.

திருநெடுத்தாண்டகம்: இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நாளைய தினம் 12ஆம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு கோவில் மூலஸ்தானத்தில் ஆரம்பமாகும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி தொடர்ந்து சந்தனு மண்டபத்தில் நடைபெறும். அப்போது அரையர்கள் அபிநயம் வியாக்யானத்துடன் பாடல்களை பாட நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

பகல்பத்து உற்சவம்: டிசம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாகும். அன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல் பத்து இரண்டாம் நாளில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் புறப்படுவார்.

சொர்க்கவாசல் திறப்பு: பகல் பத்து உற்சவத்தின் 10வது நாளான டிசம்பர் 23ஆம்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். டிசம்பர் 18ஆம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார். அன்று முதல் ராப்பத்து நாட்கள் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 28ஆம்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.

பூலோக வைகுண்டம்: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் புதுப்பொலிவு பெற்று வருகிறது. ராப்பத்து உற்சவத்தின்போது நம்பெருமாள் எழுந்தருளும் ஆயிரங்கால் மண்டபத்தின் உள்பகுதி மற்றும் தூண்களில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. வண்ண மின் விளக்குகளும் போடப்பட்டு உள்ளன. ஆயிரங்கால் மண்டபத்தின் முன் பகுதியில் உள்ள மணல் வெளியில் பந்தல் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. இது தவிர முக்கிய கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் விடுமுறை: சொர்க்கவாசல் திறக்கப்படும் 23ஆம் தேதியன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தோ்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+