திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவம்.. பத்மாவதி தாயாரை தரிசித்தால் பாக்கியங்கள் கிடைக்கும்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாத பிரம்மோற்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு வரும் நவம்பர் 10ஆம் தேதி கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை நடத்தப்படுகிறது.
பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள்.

மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
பத்மாவதி ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கருவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை.
தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் கொண்டாடப்பட்டன.
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாத பிரம்மோற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு வரும் நவம்பர் 10ஆம் தேதி கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை நடத்தப்படுகிறது.
சேஷவாகனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விருட்ச வாகனம், கஜ வாகனம் என தினசரியும் தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சீனிவாச பெருமாளுக்கு கருட வாகன சேவை எப்படி விஷேசமானதோ அதே போல பத்மாவதி தாயாருக்கு கஜ வாகன சேவை சிறப்பானது. இந்த நாளில் ஏழுமலையான் கோயில் இருந்து மூலவருக்கு சமர்ப்பிக்கப்படும் லட்சுமி காசுமாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருச்சானூருக்கு கொண்டுவரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பிக்கப்படும். இதனை அணிந்து கொண்டு கஜ வாகனத்தில் உலா வருவார்
கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்க செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது.
இந்த ஆண்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்திற்கான போஸ்டரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.கருணாகர் ரெட்டி, செயல் அலுவலர் தர்மாரெட்டி ஆகியோர் வெளியிட்டனர். பஞ்ச தீர்த்த விழாவிற்காக கோவில் தீர்த்த குளத்தை சீரமைப்பு செய்து அழகுபடுத்துவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில் 9 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications