திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..பல்லாயிக்கணக்கானோர் தரிசனம்
சென்னை: திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 500க்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. ராமானுஜர் இங்கு வந்து ஓம் நாமோ நாராயணா என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில்.
திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104 வது திவ்ய தேசம் ஆகும். மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. இத்தலத்தை பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமால் எடுத்த அவதாரம்
பிரம்மதேவனிடம் வரம் பெற்ற இரணியன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தினான். இரணியனை வதம் செய்ய வேண்டும் என்று திருமாலிடம் முறையிட்டனர் தேவர்கள். இரணியனின் தொந்தரவு இல்லாத இடத்தில் இதுகுறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று திருமாலிடம் கூறினர். அந்த நேரத்தில் ஒரு வனத்தில் கதம்ப மகரிஷி திருமாலை நோக்கி தவம் இருந்தார். தான் தவம் செய்யும் இடத்தில் யாரும் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்ய இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அப்போது இரணியனை அழிக்க, தான் நரசிம்ம அவதாரம் எடுக்கப்போவதாக தேவர்களிடம் கூறினார் திருமால்.

நரசிம்மர் கோலம்
மகிழ்ந்த தேவர்களும் கதம்ப மகரிஷியும் அந்த அவதாரத்தைக் காண விரும்பினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவதாரம் எடுப்பதற்கு முன்பே தன்னுடைய நரசிம்ம கோலத்தை காட்டி அருளினார் திருமால். இதனால் மகிழ்ந்த அவர்கள், திருமாலின் பிற அவதாரங்களையும் காண விரும்பினர். அதன்படி பெருமாளும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என்று நான்கு கோலங்களைக் காட்டி அருள்பாலித்தார், மேலும் இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை அதாவது துன்பம் நீக்கிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்று பெயர் பெற்றது.

ஒம் நமோ நாராயணாய
தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். 'ஓம்', 'நமோ', 'நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரணியனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.திருமாமகள் தாயாருக்கு தனிசந்நிதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. மகாவிஷ்ணு இரணியனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.

மகாமகக் கிணறு
இத்தலத்தில் உள்ள சிம்மக் கிணறு மிகவும் புகழ்பெற்றது. இக்கிணறு மகாமகக் கிணறு என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கிணற்றுத் தீர்த்தத்தில் மாசி மகத்தன்று நீராடி இத்தல பெருமாளை தரிசித்தால் நைமிசாரண்யம் தலத்தில் தவம் செய்த பயனும், கங்கை நதியில் நீராடி முக்தி பெற்ற பயனும் குரு தலத்தில் கடுகளவு தங்கம் தானம் செய்த பயனும் கிட்டும் என்பது நம்பிக்கை.

மகா கும்பாபிஷேகம்
இத்தகைய சிறப்புபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றதையடுத்து இன்று காலை மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இன்று காலை 8.05 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோவிலில் உள்ள சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தாயார், ஆண்டாள் மற்றும் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார்
இன்று இரவு 9 மணிக்கு சவுமிய நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோஷ்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications