திருமலை பிரம்மோற்சவம்.. நான்கு மாட வீதிகளில் உலா வந்த திருத்தேர்.. விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளில் வலம் வரும் மலையப்பசுவாமியை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
ஏழுமலையானுக்கு பிரம்மனே நடத்தும் உற்சவ விழா காலம் காலமாக திருமலையில் நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை காண ஏராளமானோர் திருமலைக்கு வருகை தருவார்கள். திருப்பதி பிரம்மோற்சவ விழா கடந்த 18ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

7ஆம் நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில், உற்சவரான மலையப்பர், ராம, கிருஷ்ண, மலையப்பர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாள், ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பகவான் வாகனத்தில் சூரிய நாராயணராக ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து, நேற்று மாலை ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி,பூதேவி சமேதமாய் மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவில் மலையப்பர் சந்திரபிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலை சந்திரனுக்கு உரிய திருத்தலம் என்பதாலும், சந்திரனின் பரிகார தலம் என்பதாலும் ஒவ்வொரு பிரம்மோற்சவ விழாவிலும், 7ஆம் நாள் இரவு சந்திர பிரபையில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நேற்றிரவு சந்திரபிரபை வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
எட்டாம் நாளான இன்றைய தினம் காலையில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது. நான்கு மாட வீதிகளில் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் முதலானோர் ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் காணமுடியும். தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தியானது, ஊர் முழுவதும் வெளிப்படும். ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடும்.
தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் தேர் இழுப்பதற்கும் தேரோட்ட திருவிழாவுக்கு உதவி செய்வதற்கும் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள முடியும். தேரோட்டத்தைக் காண முடியும். தேர் வடம் பிடிக்க முடியும்.
தேர்வடத்தை பிடித்தபடி ஆயிரக்கணக்கான பேர் நிற்கும்போது அங்கே அபரிமிதமான மனித சக்தி பொங்கத் தொடங்குகிறது. அத்தனை மனிதர்களும் கடவுளின் அருளை வேண்டி கூடியிருக்கும்போது அங்கே பிரார்த்தனையின் சக்தி மகத்தானதாக மாறுகின்றது. அளப்பரியதாக மாறுகிறது.
தெய்வத்தின் வாகனம் தேர். அந்த தேரினை இழுக்கும் சக்தி நமக்குக் கிடைக்க வேண்டும் என வேண்டுவதும் மனமுருகி வேண்டிக்கொண்டு தேரிழுப்பதும் பக்தியின் வெளிப்பாடு. அப்படி ஒருமித்த மனதுடனும் பக்தியுடனும் இருக்கிற மக்களுக்கு தெய்வமே சூட்சுமமாக வந்து சக்தியை வழங்குகிறது என்பதும் ஐதீகம்.
கடவுளின் அருள் பலம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். இதுவரை பீடித்திருந்த நோய்கள் தீரும். பாபவினைகள் தீரும். வழக்கு சம்பந்தமான பிரச்சினைகளும் சிக்கல்களும் அகலும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தேரோட்டத்தை தரிசனம் செய்தால் சகட தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைய உள்ளது.












Click it and Unblock the Notifications