Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையான் அருள்புரியும் ஆனந்த நிலையம்.. என்னென்ன சிறப்புகள்.. உலகப்புகழ் பெற காரணம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: எல்லோராலும் எளிதாக திருப்பதி சென்று விட முடியாது. ஏழுமலையானே அழைத்தால்தான் ஏழையாக இருந்தாலும் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் தரிசனம் கிடைக்கும். சீனிவாசப்பெருமாள் அருள்பாலிக்கும் ஆனந்த நிலையம் முதல் அவர் அணியும் பட்டு பீதம்பரம் வரை பல சிறப்புகள் உள்ளது.

திருப்பம் தரும் திருப்பதி: திருமலை சென்று வந்தாலே திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் மணிக்கணக்கில் ஏன் சில நேரங்களில் நாள் கணக்கில் கூட காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். திருமலையின் அடிவாரத்திலிருந்து பெருமாள் அருள்பாலிக்கும் ஆனந்த நிலையம் வரைக்கும் ஏழுமலையானின் அருள் நிறைந்திருக்கிறது.

 Tirupati Tirumalai Elumalaiyan Temple Special Futures These reason for gaining world fame.

ஏழுமலைகளின் அதிபதி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறார். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

பணக்காக கோவில்: இந்தியாவின் நம்பர் 1 பணக்கார கோவில் உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபட செல்லும் இந்து கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். இங்கு ஒருநாளைக்கு சராசரியாக 50 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். விசேஷ நாட்களில் 5 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

ஏழுமலையான்: திருப்பதி மலைமேல் உள்ள ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.

 Tirupati Tirumalai Elumalaiyan Temple Special Futures These reason for gaining world fame.

அபிஷேகப் பொருட்கள்: வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிப்பதாக கூறப்படுகிறது. பெருமாளின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய விலை உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

வெளிநாடுகளில் இருந்து: சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

கண் திறக்கும் ஏழுமலையான்: அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.

பெருமாளின் ஆபரணங்கள்: ஏழுமலையானின் ஆபரணங்களில் குறிப்பிடத்தக்க ஆபரணம் 500 கிராம் எடைகொண்ட பச்சை மரகத கல்லாகும். இதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. இந்த பச்சைக்கல் மரகதத்தை விசேஷ நாட்களில் அலங்காரம் செய்ய பயன்படுத்துகின்றனர். கோயிலில் மூலவருக்கு தினந்தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 383 வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது.

தங்க பீதாம்பரம்: ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டும் 40 கிலோ எடை கொண்டதாகும். ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

ஆனந்த நிலையம்: திருமலை ஏழுமலையான் கோவிலில் ஆனந்த நிலையம் என அழைக்கப்படும் கருவறையின் விமானம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தங்க விமானத்தை தரிசனம் செய்தால் ஏழுமலையானை தரிசனம் செய்தது போல பக்தர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தொண்டைமான் சக்கரவர்த்தி நிர்மாணித்த இந்த ஆனந்த நிலையத்தின் மீது அருள்பாலிக்கும் பெருமாள் விமான வேங்கடேஸ்வரராக போற்றப்படுகிறார் என்று பவிஷ்யோத்ர புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பந்தையம் கட்டிய ஆதிசேசன்: முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: "வாயுதேவனே, நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்". போட்டி தொடங்கியது.

ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார். வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. அதில் ஒன்று திருமலையில் விழுந்து சேஷாசலம் என ஏழுமலையில் ஒன்றாக உருவானது. சேஷாசலம் மீது ஆனந்தன் இருப்பதால் அந்த பிரதேசத்திற்கு ஆனந்த நிலையம் என்ற பெயர் வந்தது என புராண கதை கூறுகிறது.

ஆதி வராக சுவாமி: ஏழுமலையானை தரிசிக்கும் முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும். அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும் என்பது விதி. வராகமூர்த்தியை வழிபட்டப் பின்னரே, மூலவரான சீனிவாச பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பதற்கான காரணமும் உள்ளது. புராணங்களின்படி இது ஆதி வராக க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார் என்கிறது புராணம்.

ஏழுமலையான் தரிசனம்: அனுமனை தரிசனம் செய்து விட்டு பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து பல வாயில்களை கடந்து பங்காரு வாகிலி எனப்படும் தங்க நுழைவு வாயில் வழியாக ஆனந்த நிலையத்தில் அருள் புரியும் ஏழுமலையானை தரிசனம் செய்வோம். அந்த இடத்தை அடைந்த உடன் எழும் உணர்வுகளை வார்த்தைகளால் கூற இயலாது.

பாத தரிசனம்: பெருமாளுக்கு நேர் எதிரே கருடனை தரிசனம் செய்து விட்டுதான் பெருமாளை பார்க்க வேண்டும். பெருமாளின் பாதத்தை முதலில் தரிசித்து விட்டு அவரது மார்பில் உறையும் மகாலட்சுமியை தரிசனம் செய்து விட்டு முக தரிசனம் செய்ய வேண்டும். ஆனால் இவ்வளவு பொறுமையாக ஏழுமலையானை தரிசிக்க விடமாட்டார்கள். ஒருமுறை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து விட்டு வாருங்களேன்.. திருப்பம் நிச்சயம் ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+