திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி.. 10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு.. விஐபி பிரேக் தரிசனம் ரத்து
சென்னை: வைகுண்ட ஏகாதசி விழா தொடங்க உள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. 10 நாட்களும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் எனவும் ஆர்ஜித சேவைகளும், விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்பட உள்ளது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யாயன உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து, ரா பத்து என்று 21 நாட்கள் நடைபெறும். திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய பெரு விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

25 நாட்கள் விழா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் 25 நாட்கள் நடைபெறும். இந்த 25 நாட்களில் வைணவர்கள் ஒன்றுகூடி, 12 ஆழ்வார்கள் அருளிய நான்காயிரம் திவ்ய பிரபந்த பாசுரங்களை தினமும் பாராயணம் செய்யவார்கள். நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யும் இந்த 25 நாள் விழாவிற்கு அத்யாயன உற்சவம் என்று பெயர்.
திருப்பாவை பாசுரம்: அத்யாயன உற்சவத்தின் 24வது நாள் வராஹ சுவாமி சாத்துமுறை நடத்தப்பட்டு, 25வது நாளில் உற்சவம் நிறைவடையும். அத்யாயன உற்சவம் கடந்த வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் ரங்கநாயகர் மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும், கிழக்கு திசையை நோக்கி ராமானுஜரும் கொலு வைக்கப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு திருப்பாவை பாசுரம் பாடப்பட்டது வரும் ஜனவரி 5ம் தேதி அத்யாயன உற்சவம் நிறைவடையும்.
10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு: திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் மின் விளக்குகள், மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
எத்தனை மணிக்கு தரிசனம்: டிசம்பர் 23 ஆம் தேதி அதிகாலை 1:45 மணிக்கு வைகுண்ட துவார தரிசனம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட துவார தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக சிறப்பு நுழைவு தரிசனம், ஸ்லாட்டட் சர்வ தரிசனம், ஸ்ரீவாணி மற்றும் மெய்நிகர் சேவா தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளதாக திருமலை திருப்பதி செயல் அதிகாரி ஏவி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
9 இடங்களில் டிக்கெட்டுகள்: பக்தர்கள் வரிசைகளில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் நோக்கில், திருப்பதியில் உள்ள ஒன்பது இடங்களில் உள்ள 92 கவுன்டர்களிலும் 4,23,500 சர்வ தரிசன டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தர்மா ரெட்டி கூறியுள்ளார். விஷ்ணு நிவாசம், சீனிவாசம், கோவிந்தராஜ சுவாமி சௌல்ட்ரீஸ், பூதேவி வளாகம், ராமச்சந்திர புஷ்கரணி, இந்திரா மைதானம், ஜீவ கோனா மேல்நிலைப் பள்ளி, பைராகிப்பட்டேடாவில் உள்ள ராம நாயுடு மேல்நிலைப் பள்ளி, எம்.ஆர்.பள்ளியில் உள்ள ZP பள்ளி ஆகிய இடங்களில் டிக்கெட் கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
என்னென்ன ஏற்பாடுகள்: வைகுண்ட துவார தரிசன டோக்கன்கள் டிசம்பர் 22 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் வழங்கப்படும் என்பதால், அதே நாளில் தரிசனத்துக்கான ஸ்லாட் சர்வ தரிசன டோக்கன்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதனால் அன்றைய தினம் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டுமே பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு செல்ல முடியும்.
இந்த கவுன்டர்களில் சிறப்பு வரிசைகள், தடுப்புகள், குடிநீர், காபி, டீ மற்றும் ஸ்னாக்ஸ் ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி: இதனிடையே வைகுண்ட ஏகாதசி நாளான டிசம்பர் 23 ஆம் அன்று காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மலையப்ப சாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தங்கத்தேர் உலா நடைபெறுகிறது. வைகுண்ட துவாதசி தினமான டிசம்பர் 24 ஆம் தேதி சுவாமி புஷ்கரணி தீர்த்த முக்கொடி எனப்படும் சக்ர ஸ்நானம், அதிகாலை 4:30 முதல் 5.30 மணிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதியில் சொர்க்க வாசல் திறந்திருக்கும் இந்த 10 நாட்களும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகுண்ட துவார தரிசன பத்து நாள் விழாவை முன்னிட்டு அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் விஐபி பிரேக் தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம்: கடந்த முறை போலவே இம்முறையும் விஐபிக்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு குறைந்த அளவிலேயே ஸ்ரீவாரி தரிசனம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பத்து நாட்களில் எந்த பரிந்துரை கடிதமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications