கோவிந்தா! கோவிந்தா! ஒரு கோடி முறை எழுதி வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனம்.. தேவஸ்தானம் அறிவிப்பு
ஐதராபாத்: திருப்பதியில் சாதாரண பக்தர்களும் விஐபி தரிசனத்தில் சென்று ஏழுமலையான தரிசிக்கும் ஒரு வாய்ப்பை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால், இதற்கு ஒரு நிபந்தனையும் பக்தரக்ளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இதனால், எப்போதும் திருவிழா காலம் போல த்தான் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சாதாரண நாட்களிலேயே பல மணி நேரம் காத்திருந்துதான் ஏழுமலையானை தரிசிக்க முடியும். அதிலும் விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை எப்படியாவது தரிசித்து விட்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர்கள் காலத தாமத்தையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்த பிறகே திரும்புவார்கள். இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டணத்தில் செல்லும் விரைவு தரிசனம், விஐபி தரிசனம் என பல்வேறு நடைமுறைகள் பக்தர்கள் வசதிக்காக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் விஐபி பிரேக் தரிசனத்தை பொதுமக்களே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புது அறிவிப்பை திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது, கோவிந்தா கோவிந்தா என ஒரு கோடி முறை எழுதி வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 10,01,116 முறை எழுதி வந்தால் அவருக்கு மட்டும் விஐபி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி கூறியதாவது:- கோவிந்தா என்ற பெயரை கோடி முறை எழுதும் இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கோவிலில் விஐபி தரிசன வசதியை வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளது. இதை சிறந்த முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ரயில் நிலையம் அருகே 600 கோடி ரூபாய் மதிப்பில் 20 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விதமாக அதி நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது"என்றார்.
தற்போது L3 VIP Break Darshan முறையில் பக்தர்கள் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் எம்.பி, எம்.எல்.ஏக்கள், போர்டு உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என எழுதினால் சாதாரண பக்தர்களும் விஐபி தரிசனத்தின் சாமி தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications