வைகாசி பௌர்ணமி..சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..வனத்துறை கட்டுப்பாடு
விருதுநகர்: வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம், வைகாசி விசாகம் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை எனவும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள்.

மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
இந்த மலையில் உள்ள தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம்.
எட்டு அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்பது நம்பிக்கை. அகஸ்தியர். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.
ஜூன் 3ஆம் தேதி வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகாசி பவுர்ணமி தினம் வைகாசி விசாகத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர். காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இன்று வியாழக்கிழமை வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளனர். சனி, ஞாயிறு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வனத்துறை அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications