வைகுண்ட ஏகாதசி.. திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. ரூ.300 ஆன்லைன் டிக்கெட் நாளை ரிலீஸ்
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் வரும் நாளைய தினம் ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மார்கழி மாதத்தில் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தபடியாக வைகுண்ட ஏகாதசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 23ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதனிடையே ஆன்லைனில் நாளைய தினம் 10ஆம் தேதி ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் ஆகியவற்றை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி துவங்கி ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை 10 நாட்களுக்கும் மொத்தமாக 2,25,300 ரூபாய் கட்டணத்தில் ஆன தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.
அதேபோல் நாளை மாலை 3 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் 20,000 டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.
தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி ஒவ்வொரு டிக்கெட் க்கும் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். நாளை மாலை 5 மணிக்கு துவங்கி திருப்பதி, திருமலை ஆகிய ஊர்களில் உள்ள தேவஸ்தான தங்கும் அறைகளையும் பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications