வாஸ்து டிப்ஸ்.. பண வருமானத்தை அள்ளித்தரும் அதிர்ஷ்ட செடி..எந்த திசையில் நட வேண்டும் தெரியுமா?
மதுரை: பண வருமானம் திடீரென தடைபடும். கடனாக கொடுத்த பணமோ, நிதி நிறுவனத்தில் முதலீடாக செய்த பணமே சிலருக்கு திரும்ப வராது. உறவினர்கள் சிலரே பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுவார்கள். இப்படி பணத்தை இழந்து தவிப்பவர்கள் தங்களின் வீட்டில் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய சில செடிகளை வளர்க்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அது எந்த செடி? நம்முடைய வீட்டில் பண மழை பொழிய எந்த திசையில் வளர்க்க வேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பகவான் மகாவிஷ்ணுவிற்கு உகந்தது துளசி செடி. மகாலட்சுமியின் அம்சமான துளசி செடி நம்முடைய வீட்டில் வளர்ப்பது சிறப்பானது. பசுமையான நன்கு வளர்ந்த துளசி செடி அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. துளசி பூஜை செய்யக்கூடிய வீடுகளில் அன்னை மகாலட்சுமி என்றும் நிரந்தர வாசம் செய்வார் என்பது நம்பிக்கை. மகாலட்சுமியின் அருள் என்றும் நிலைத்திருக்க துளசி செடியை சரியான திசையில் நட்டு வளர்க்க வேண்டும்.
துளசியில் பல வகை உண்டு. பகவான் கிருஷ்ணருக்கு உகந்த துளசி செடியை வீட்டு முற்றத்தில் வளர்ப்பது சிறப்பு. இதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். முற்றத்தில் துளசி மாடம் கட்டி வளர்ப்பதன் மூலம் தேவையான அளவு வெளிச்சம், தண்ணீர், காற்று போன்றவை கிடைக்கும். அந்த குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

இன்றைக்கு கிராமங்களில் துளசி செடியை வீட்டு வாசலில் நட்டு வளர்க்கின்றனர். நகரங்களில் அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள் துளசி செடியை பால்கனியில் நட்டு வளர்க்கின்றனர். துளசி செடியை ஒருபோதும் காய விடக்கூடாது. ஒருவேளை காய்ந்து போனால் துளசி செடியை அகற்றி விட்டு வேறு புதிய செடியை நட வேண்டும்.
நம்முடைய வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு திசையில்தான் துளசி செடியை நட வேண்டும். துளசி செடி இறை அம்சம் நிறைந்த செடி என்பதால் தெய்வங்கள் வாசம் செய்யும் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் நடுவதுதான் சிறப்பானது. குபேரனின் திசையான வடக்கு திசையில் மாடம் அமைத்து துளசி செடியை வளர்ப்பதன் மூலம் நமக்கு செல்வ வரவு குறையின்றி இருக்கும் பண வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும்.
கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டாலோ குடும்பத்தில் பிரிவினை ஏற்பட்டாலோ அதற்கு ஒரே பரிகாரம் துளசி பூஜைதான். சமையல் அறைக்கு வெளியே கன்னி மூலை பகுதியில் துளசி செடியை நட்டு வளர்த்தால் துளசியின் வளர்ச்சிக்கு ஏற்ப குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும் சண்டை சச்சரவு நீங்கும். கணவன் மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.
வாஸ்துபடி துளசி செடியை தெற்கு திசையில் வளர்க்கக்கூடாது. தென்திசை மறைந்த முன்னோர்களின் திசை எமனின் திசையாகவும் கருதப்படுகிறது. எனவே தெற்கு திசையில் துளசியை வளர்த்தால் அது வளராமல் வாடி விடும். மகாலட்சுமியின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும் என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
துளசியை வீட்டின் முன்புறம் கிழக்கு,வடக்கு திசையில் வளர்ப்பது எந்த அளவிற்கு வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்குமா அதே போல சில செடிகளை வளர்க்காமல் இருப்பது நல்லது. சில செடிகள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும், முட்கள் உள்ள செடிகளை ஒருபோதும் வீட்டின் முன்புறம் வளர்க்கக் கூடாது. ரோஜா, கற்றாழை, அரளி, முருங்கை மரம், வாழை போன்றவைகளை வீட்டின் முன்புறம் வளர்க்கக் கூடாது. அப்படி தெரியாமல் வளர்த்தால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அரளி செடி அக்கம் பக்கத்தினரிடையே சண்டை சச்சரவினை அதிகரிக்கும்.
போன்சாய் செடிகளை வீட்டிற்கு வளர்ப்பது அழகாக இருந்தாலும் அது நேர்மறை ஆற்றலை குறைத்து விடும். எனவே தேவையில்லாமல் இருக்கும் செடிகளை அகற்றி விட்டு வீட்டின் வடகிழக்கு மூலையில் துளசி மாடம் அமைத்து நட்டு வளர்ப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் ஆசியுடன் பண வருமானம் அதிகரிக்கும் பணத்தை மிச்சப்படுத்தலாம். நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும். நோய் நொடிகளும் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications