ஜொலித்த திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்.. 75 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்
திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டையில் தென்கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோவிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதிகளில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 முதல் தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும்.

அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமிக்கு கஜ பூஜை நடைபெற்றது.இதைத்தொடர்ந்து உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் ராட்சத கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது.
வழக்கமாக இந்த விழாவிற்காக கோவில் மடப்பள்ளியில் 6 கிலோ வரையிலான தேங்காய்ப்பூ, 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ அளவிலான உருண்டை வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள் மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி விழா நாளுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு சுடுநீர் ஆவியில் வேகவைத்து 150 கிலோவில் தயார் செய்யப்படும் கொழுக்கட்டை படையலிடப்படும்.

அதேபோல் இந்த ஆண்டும் வழக்கமான அளவில் கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. இந்த கொழுக்கட்டையை நேற்று காலை கோவில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கிக்கொண்டு சென்றனர். இதில் உச்சிப்பிள்ளையாருக்கும், பின்னர் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகருக்கு படையல் செய்யப்பட்ட கொழுக்கட்டை கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த திரளான பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்காக கோவிலில் மலை உச்சியில் உள்ள படிகளில் பல்வேறு வகையான வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. மேலும் மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பல்வேறு வகையான பழ வகைகள், மலர்களால் ஆன பந்தல் மற்றும் வாழைமரங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

விழாவில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் துறை ரீதியிலான அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் வருகிற 1ஆம் தேதி வரை 14 நாட்கள் சுவாமிக்கு பல்வேறு வகையான அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications