ராமனுக்கு சபரி இலந்தைப் பழம் கொடுத்தது ஏன் தெரியுமா?
சென்னை: ராமனுக்கு சபரி இலந்தை பழம் கொடுத்தது ஏன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ராம ஜெபத்தை வாழ்நாள் முழுவதும் கூறிய சபரி யார் இவர்? என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து "நானறிந்த ஆன்மீகம்" எனும் சமூக வலைதளப் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ராமனுக்கு சபரி இலந்தைப் பழம் கொடுத்தது ஏன்?

நமக்கு ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால், அது எவ்வளவு விரைவாக நடந்து முடிய வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வோம். பலரின் சிபாரிசுகளுக்கு முயற்சி செய்வோம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முயற்சி பலனளிக்காவிட்டால் சலிப்படைவது, முயற்சியைக் கைவிடுவது போன்ற எதிர்மறைச் செயல்களையே செய்வோம். இன்னும் சிலர் இறைவனையே நிந்திக்கவும் செய்வர்.
சபரியின் கதை
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் முழு நம்பிக்கை வைத்து, காலக்கெடுவைப் பற்றித் துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த 'ராம' மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஜபித்த 'சபரி' என்னும் பெண்மணி போற்றுதலுக்குரியவள். எட்டு வயதுச் சிறுமியான சபரிக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. வேடுவப் பெண்ணான காட்டுவாசி சபரியின் தந்தை மற்றும் காட்டுவாசிகள் புடைசூழ சபரியின் வீட்டில் விருந்து அமர்க்களப்பட்டது.
விருந்துக்காகக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் ஆடுகளைக் கண்டு அதிர்ந்து போனாள் சபரி. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுத்தது. ஆடுகளை வெட்டி விருந்துண்ண வேண்டாம் என மன்றாடினாள். ஆனால், சிறுமியின் குரல் எவர் காதிலும் விழவில்லை. ஆடுகள் வெட்டப்படுவதைக் காண விரும்பாத அவள், வீட்டை விட்டு வெளியேறினாள். கால் போன போக்கில் 'நாராயண' மந்திரத்தை உச்சரித்தபடியே நடந்தவள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மதங்க மகரிஷியின் ஆசிரமத்தை வந்தடைந்தாள்.
வந்தவள் களைப்பு மிகுதியால் ஆசிரமத்தின் நுழைவாயில் அருகில் உறங்கிப் போனாள். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் சபரி, மறுநாள் விரைவில் எழுந்து முன்தினம் கண்ட கங்கைக் கரைக்குச் சென்றாள். கங்கை செல்லும் வழி நெடுகிலும் கல்லும் முள்ளும் இருப்பதைக் கண்டு அவையனைத்தையும் அப்புறப்படுத்தி, பின் நீராடச் சென்றாள்.
கங்கைக் கரைக்கு வரும் வழி நெடுகிலும் மிகவும் சுத்தமாக இருப்பதைக் கண்ட மதங்க மகரிஷி, தன் சீடர்களிடம் விசாரித்தார். ஒரு சிறுமி முன் இரவில் ஆசிரமம் வந்து, வாசல் அருகில் உறங்கியதையும், பின் கங்கை செல்லும் வழியைச் சுத்தப்படுத்தியதையும், தற்போது கங்கையில் குளித்துக்கொண்டிருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.
கங்கைக் கரையை அடைந்த மகரிஷி, சிறுமி சபரி குளித்துவிட்டு 'நாராயண' மந்திரத்தை ஜபித்தபடி நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தார். அச்சிறுமியைக் கண்ட மாத்திரத்தில், பின்னால் நடக்கப் போவதை அவர் தீர்க்கதரிசனமாக அறிந்தார். ஸ்ரீமன் நாராயணன் அடுத்து எடுக்கப்போகும் ஸ்ரீராம அவதாரத்தில், இச்சிறுமியின் வயது முதிர்ந்த காலத்தில் தானே வந்து தரிசனம் அளிக்கப் போவதைக் கண்டார். அச்சிறுமியின் பாக்கியத்தை எண்ணி மெய்சிலிர்த்தார். கரையேறிய சபரியை மகரிஷி அழைத்தார். "மகளே... நீ யார்?"
"ஆச்சார்ய ரிஷி முனிவருக்கு என் பணிவான நமஸ்காரங்கள். நான் காட்டுவாசி வேடுவனின் மகள். என் பெயர் சபரி. தீண்டத்தகாதவளான நான், உங்கள் ஆசிரமம் என்று அறியாமல் களைப்பு மிகுதியால் உறங்கிவிட்டேன். என்னை நீங்கள் மன்னித்தருள வேண்டும்" என்றாள் சபரி.
"குழந்தாய்! நாங்கள் செய்த பாக்கியத்தால் நீ இந்த ஆசிரமத்திற்கு வந்துள்ளாய். நீ இனி இந்த ஆசிரமத்திலேயே தங்கலாம்! பகவான் ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீராமனாக அவதரிக்க உள்ளார். அந்த ஸ்ரீராமன் உன்னைத் தேடி இந்த ஆசிரமத்திற்கு வந்து தரிசனம் தருவார். ஸ்ரீராம தரிசனம் கிடைக்கப்பெறும்வரை நீ 'ஸ்ரீராம' என்று ராம நாமத்தை ஜபித்து வருவாயாக!" என்று உளம்கனிந்து சொன்னார்.
"ஆச்சார்ய குருவே, மிக்க நன்றி. தங்கள் கட்டளைப்படி நடப்பேன்! என்னை ஆசீர்வதியுங்கள்." "மங்களம் உண்டாகட்டும் குழந்தாய்!" என்று அவளை ஆசீர்வதித்தார் மகரிஷி. அதுமுதல் சிறுமி சபரி ராம நாமத்தை இடைவிடாது ஜபித்து வந்தாள். சபரியைக் காணாத அவளது தந்தை அவளைத் தேடி ஆசிரமத்திற்கே வந்துவிட்டார். தன் மகள் அங்கிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தார். சபரியின் விருப்பப்படியே ஆடுகள் அனைத்தையும் விடுவித்துவிட்டதாகவும், வீடு திரும்புமாறும் கேட்டுக்கொண்டார்.
மதங்க மகரிஷி, சபரியின் பெருமையை அவள் தந்தைக்கு உணர்த்தி, அவள் ஆசிரமத்திலேயே இருக்கட்டும் என்று கூற, அவள் தந்தை ஆச்சரியப்பட்டு சபரியை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். சபரிக்கு மிகவும் பிடித்த பழம் இலந்தைப் பழமாகும்.
ஆசிரமத்திலிருந்து வெகு தொலைவில் இலந்தை மரக்காடுகள் இருந்தன. தினந்தோறும் அங்கு சென்று கூடை நிறையப் பழங்களைக் கொண்டுவந்து தானும் உண்டு ரிஷி குமாரர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வாள்.
காட்டிலுள்ள இலந்தை மரங்களில் மிக ருசியான பழக் கொட்டைகளைத் தேர்வு செய்து, மதங்க மகரிஷி ஆசிரமத்தைச் சுற்றி அக்கொட்டைகளை விதைத்தாள். சபரியின் வருகைக்குப் பிறகு ஆசிரமமே ஒளி பெற்றது. காலம் உருண்டோடியது. மதங்க மகரிஷி சமாதி அடைந்தார். எட்டு வயதுச் சிறுமி என்பது கடந்து முதியவளாகிவிட்டாள் சபரி. இன்னமும் ராம நாமத்தை விடாது உச்சரித்துக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் ஒரு ரிஷி முனி சபரியிடம், "அன்னையே, தாங்கள் அனுதினமும் ஜபிக்கும் ஸ்ரீராமன் சூரிய குலத்தில் அவதரித்து, பால பருவத்தில் விசுவாமித்திர ரிஷியுடன் சென்று, அவருக்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்து, பின்னர், சிவதனுசை இரண்டு துண்டுகளாக்கி, ஜனக மகாராஜாவின் புதல்வி சீதையை மணந்து, பட்டாபிஷேக வைபவத்திற்கு முன்பு இளைய தாயாரின் உத்தரவை ஏற்று வனம் சென்றார்.
வனத்தில் அரக்கன் ராவணன், சீதாதேவியைக் கவர்ந்து சென்றுவிட்டான். சீதையைத் தேடித் தென்முகமாக வந்துகொண்டிருக்கும் ஸ்ரீராமன், தற்போது நம் ஆசிரமத்துக்கு அருகாமையில் உள்ள வனத்தில் இருப்பதாக அறிகிறோம். நம் ஆச்சாரியார் கூறியபடி ஸ்ரீராமன் நம் ஆசிரமம் தேடிவரும் வேளை நெருங்கிவிட்டது என்றே தோன்றுகிறது," என்று கூறி நெகிழ்ந்தார்.
சபரியின் கண்களில் கண்ணீர். ஸ்ரீமன் நாராயணனை மகாலட்சுமியோடு சேவிக்கக் கற்றுக்கொடுத்திருந்தார் அவளுடைய தந்தை. ஆனால், ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீராமன் வரும்போது சீதாதேவி இல்லாமலா அவரைச் சேவிப்பது? என்று வேதனையடைந்து தன் குருவைப் பிரார்த்தித்தாள். ஆசிரமத்து வாசலில் இலந்தை மரங்களில் பழங்கள் ஏராளமாக இருந்தன. அவையும் ஸ்ரீராமனின் வருகைக்காகக் காத்திருக்கின்றனவோ?
மறுநாள் வழக்கம்போல கங்கையில் குளிக்கச் சென்றாள். குளித்துக் கரையேறியதும் ரிஷி குமாரர் ஒருவர் ஓடிவந்து, "ஸ்ரீராமன் ஆசிரமம் வந்துள்ளார். சபரிக்காகக் காத்திருக்கிறார்" என்று கூறினார். முதியவளான சபரியின் நடையில் வேகம் கூடியது. சபரி ஆசிரமத்துள் நுழையும்போதே, ஸ்ரீராமபிரான் ஓடிவந்து, அவளைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு அமரச் செய்தான். ஆசிரமத்து வாயிலில் பழுத்துத் தொங்கிய இலந்தைப் பழங்களை இரண்டு கைகளாலும் அள்ளி வந்த சபரி, அதை அப்படியே ஸ்ரீராமன் கையில் கொடுத்து அவரை வலம் வந்தாள்.
ஸ்ரீராமனின் காலடியில் விழுந்து சேவித்தாள். "பிரபோ, என் குருவின் வாக்கு இன்று பூர்த்தியானது. அவர் எனக்கு உபதேசித்த ராம நாமத்தால் உன் தரிசனம் கிடைத்தது. ஸ்ரீராமா, உன்னைத் தனியாகச் சேவிக்க என் மனம் இடம்தரவில்லை. என் தந்தை 'மகாலட்சுமியோடுதான் ஸ்ரீமன் நாராயணனைச் சேவிக்க வேண்டும்' என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார். என் குரு சொன்னபடி, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாகிய ஸ்ரீராமா, சீதாதேவி இன்றி நான் எப்படிச் சேவிப்பது என்று குழம்பினேன்.
என் குருநாதர் எனக்கு அறிவுறுத்தியபடி, 'பத்ரி' என்றால் இலந்தை. இலந்தைப் பழமோ மகாலட்சுமி ஸ்வரூபம். ஆகவேதான் உன் கையில் இலந்தைப் பழத்தைக் கொடுத்து சீதாதேவியோடு என் ராமனை நான் சேவிக்கிறேன். என் தந்தையின் விருப்பமும் என் குருநாதரின் ஆசியும் உன்னை மகிழ்வோடு சேவிக்கப் பாக்கியமாயிற்று. ஸ்ரீராமா, சீதையைப் பிரிந்துவிட்டோமே என்று துயர் கொள்ள வேண்டாம்.
இங்கிருந்து சற்றே தொலைவில் வானரப் படைகளின் மகாராஜாவான சுக்ரீவன் இருக்கிறார். அவருடைய உதவியோடு சீதை உன்னிடம் திரும்பி வருவாள். சீதை உன் அருகில் இருக்கப் பட்டாபிஷேகம் சிறப்பாக நடக்கும். இது உறுதி" என்று கூறினாள். புன்னகையோடு அவளுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமன், சபரியிடமிருந்து விடைபெற்றான். ஸ்ரீராமனைக் கண்ட மகிழ்ச்சியில் இன்னமும் உத்வேகத்தோடு ராம நாமத்தை ஜபிக்க ஆரம்பித்தாள் சபரி.
சபரி, ஸ்ரீராமனிடம் தனக்கு 'முக்தி' கொடு என்று கேட்கவில்லை. ஏனெனில், எவ்வித எதிர்பார்ப்புமின்றி இறைவனைத் தொழுவது மட்டுமே நம் கடமை என்று அவள் தந்தை உபதேசித்திருக்கிறார். ஸ்ரீராமனும் சபரிக்கு ஏதும் வரம் அளிக்கவில்லை. ஏனெனில், அவளிடம் இருக்கும் 'ராம நாமமே' எதையும் பெற்றுத் தந்துவிடும் என்று அறிவார்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் 96 கோடி முறை ராம நாமத்தைக் கூறி, ஸ்ரீராமனின் தரிசனத்தை ஒரு கணம் காணப்பெற்றார். சபரி, ஸ்ரீராமன் அவதரிக்கும் முன்னரே குருவின் உபதேசம் பெற்று ஸ்ரீராம நாமத்தை உச்சரித்து, தன் வாழ்நாளையே ராம நாமத்திற்காக அர்ப்பணித்தாள் என்றால் அது மிகையல்ல.
ஸ்ரீராம ஜெயம்!
இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications